அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?: மதுரை கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கேள்வி!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில், பக்தர்கள் நீண்ட தூரத்தில் இருந்து கோயில் கோபுரங்களை பார்க்க முடியாததால், பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும்
இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அரசின் அரசாணையை மீறி மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டிய உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது. விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு இருப்பது உறுதியானால் எவ்வித பாகுபாடும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்தார்கள்? மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டடங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமம் கொடுத்த அனுமதி எத்தனை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, மேலும் விரிவான அறிக்கையை ஏப்ரல் 4க்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related posts

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை