மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை முறையில் நடந்த போக்குவரத்து மாற்றம்: விரைவில் புதிய நடைமுறை அறிவிப்பு

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் நடக்கும் மேம்பாலம் கட்டுமான பணிக்கென போக்குவரத்து மாற்றத்துடன் நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் காணப்பட்ட நடைமுறை இடர்பாடுகளை ஆய்வு செய்து, விரைவில் புதிய தொடர் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட உள்ளது. மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது பாலம் கட்டுமானம் வேகமடைந்துள்ள நிலையில், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில், கோரிப்பாளையம் பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்து, சிரமமின்றி நகருக்குள் வாகனங்கள் சென்று வர வசதியாக நேற்று ஒருநாள் மட்டும் போக்குவரத்து மாற்றங்களுடன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘காலை 10 மணி முதல் 2 மணி வரை மாட்டுத்தாவணி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏற்கனவே அறிவித்த மாற்றுப்பாதையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்த போக்குவரத்து மாற்றத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் போக்குவரத்து எந்தெந்த பகுதிகளில் சீராக இயங்கின என்பன உள்ளிட்ட நன்மைகளும், பாதிப்புகளும் கண்டறியப்பட்டன. மேலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து மாற்றத்தில் ஈடுபட்ட போலீசார் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இவை குறித்து ஆய்வு செய்து, சிரமங்கள் சரி செய்யப்பட்டு விரைவில் புதிய போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்படும். அது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்’’ என்றனர்.

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை