மதுரை தீ விபத்து விவகாரம்: மகளிர் விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!!

மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி என்ற பெயரில் தனியார் விடுதி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென விடுதியில் இருந்த பிரிட்ஜில் தீ விபத்து ஏற்பட்டு அதிகளவிற்கான நச்சு கரும்புகை வெளியேறியுள்ளது. இதில் தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 3 பெண்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். விடுதிக் கட்டடம் முறையான அனுமதி பெறாமலும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட விசாகா பெண்கள் விடுதிக் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா ஜெகதீஸ் மற்றும் விடுதி காப்பாளரான புஷ்பா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திடீர் நகர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக பெண்கள் விடுதி மருத்துவமனை மெடிக்கல் மற்றும் விடுதி அமைந்துள்ள கட்டிடங்களில் கீழ் அமைந்துள்ள கடைகளுக்கு இன்று மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து மகளிர் விடுதி கட்டடத்தில் செயல்பட்டு வரும் விசாகா மருத்துவனையில் மருத்துவர் தினகரன் பணியாற்றி வருகிறார். அவர் எலோக்ட்ராபதி மருத்துவம் படித்தவர். இருப்பினும் அவரை வைத்து அலோபதி சிகிச்சை தர வைத்து ஏமாற்றியதாக சுகாதார இணை இயக்குநர் புகார் அளித்தார். இந்நிலையில், அலோபதி மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்த விசாகா மருத்துவமனை மருத்துவர் தினகரன் கைது செய்யப்பட்டார். மேலும், விடுதி உரிமையாளர் இன்பா, மேலாளர் மனைவி புஷ்பா ஆகியோர் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?