மதுரை அருகே 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 2 பேர் பலி-16 பேர் படுகாயம்

திருப்பரங்குன்றம் : மதுரை அருகே தனியார் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 60 பயணிகளுடன் ஒரு தனியார் பேருந்து நேற்று தேனி மாவட்டம், போடிக்கு புறப்பட்டது. பேருந்தை உசிலம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (40) ஓட்டிச்சென்றார். நடத்துனராக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த பாண்டியராஜன் இருந்தார். நாகமலை புதுக்கோட்டை அருகே, தனியார் பேருந்து முன்னால் சென்ற அரசுப்பேருந்தை முந்திச்செல்ல முயன்றுள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டி.ராமநாதபுரத்தை சேர்ந்த பிச்சை (65), எழுமலையை சேர்ந்த குருசாமி (70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், எஸ்.ஐ கணேஷ்குமார், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.படுகாயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருமங்கலம் அருகே கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!

பழநி-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவை பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை