மதுரையில் ₹215 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

மதுரை: மதுரையில் ரூ.215 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறக்கப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடி மதிப்பீட்டில், 7 தளங்கள், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உலகம் தரம் வாய்ந்த அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைக்கிறார். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

திறப்பு விழாவிற்காக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நாளை காலை 11.20 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் செல்கிறார். நூலகத்தை திறந்து வைத்து தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி முடிந்ததும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார். முன்னதாக, சமீபத்தில் மறைந்த கருமுத்து கண்ணனின் கோச்சடை வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எல்காட் மையத்தை திறந்து வைக்கிறார். திரும்பும் வழியில் முனிச்சாலையில் உள்ள பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மார்பளவு சிலையை திறந்து வைத்து விட்டு விமானம் நிலையம் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு முதல்வர் வருகையையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 2 ஆயிரம் வரையிலான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் விழா நடக்குமிடம், நூலக பகுதியில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் ஆய்வு மேற்கொள்கின்றனர். பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள கூடுதல் டிஜிபி அருண் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகியோர் இன்று மதுரை வருகின்றனர்’ என்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்