மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மதுரை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. நித்யானந்தா பீடத்தை சேர்ந்த நரேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீனத்தில் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர், நித்யானந்தாவை 293வது ஆதீனமாக 27.4.2012ல் நியமனம் செய்தார். பின்னர், நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்வதாக அக். 21ல் ஆதீனம் அருணகிரிநாதர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது நியமனத்தை உறுதிப்படுத்தக் கோரி மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமனம் செய்த உத்தரவை, அருணகிரிநாதர் ரத்து செய்து உத்தரவிட்டதை அங்கீகரிக்க கோரியும் கூறியிருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அருணகிரிநாதர் 13.8.2021ல் இறந்தார். இதன்பின்னர், 293வது மதுரை ஆதீன மடாதிபதியாக ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியாரை நியமித்து அங்கீகரித்துள்ளனர். இதையடுத்து, அருணகிரிநாதருக்கு பதிலாக தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு வழக்கை தொடர்ந்து நடத்தக்கோரிய மனுவில், 293வது ஆதீன நியமனத்தை மதுரை நீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டது. அவர் ஆதீனமாக தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. முறைப்படி 293வது ஆதீனமாக அருணகிரிநாதர் மூலம் நித்யானந்தா தான் நியமிக்கப்பட்டார். கீழமை நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், ‘‘மதுரை ஆதீனத்தின் 293வது ஆதனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியாரை நியமித்ததை இந்து சமய அறநிலையத்துறை பதிவு செய்துள்ளது. எனவே, அவர் 292வது ஆதீனத்திற்கு பதிலாக தன்னை மனுதாரராக வழக்கில் இணைத்துக் கொள்ள, கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததில் தலையிடத் தேவையில்லை. இருப்பினும் வழக்கில் அருணகிரிநாதரின் இடத்தில் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியாரை நியமிப்பது குறிப்பிட்ட நோக்கத்திற்கு மட்டுமே என்பது தெரிய வருகிறது. 293வது ஆதீனமாக, 292வது ஆதீனம் அறிவித்தது செல்லுமா, செல்லாதா என கீழமை நீதிமன்றம் சட்டம் குறித்த தகுதி அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது