சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 1963ம் ஆண்டு செப்.28ம் தேதி பிறந்தவர் கே.ஆர்.ஸ்ரீராம். இவரது முழு பெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை, கணக்கியல் மற்றும் எல்எல்பி ஆகியவற்றில் பி.காம் படித்தார்.

அதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து எல்எல்எம் (கடல் சட்டம்) முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் கடந்த 1986ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி மகாராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

கே.ஆர்.ஸ்ரீராம் வழக்கறிஞராக, கடந்த 1997ம் ஆண்டு முதல் கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டங்களில் தனி நிபுணத்துவத்துடன் வணிக விவகாரங்களை கையாண்டு வந்துள்ளார். குறிப்பாக, துறைமுக சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு, நிறுவன சட்டம் ஆகியவற்றிலான விஷயங்களை கையாளுவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தார் கே.ஆர்.ஸ்ரீராம்.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். பின்னர் மூன்றே ஆண்டுகளில் 2016ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார்.

மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் கடந்த ஆண்டு மே மாதம் நியமித்தார். இவர் கடந்த மே மாதம் 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார்.

அவர் அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்: சாம்சங் நிறுவனம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு