சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவில் இருந்து யுஜிசி பிரதிநிதி நீக்கம்: தமிழக அரசு அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில் ஒரு உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். இதற்கான தேடுதல் குழு தங்களுடைய பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆளுநரின் இந்த கருத்துக்கு, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த 6ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஒரு உறுப்பினரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். ஆளுநரின் இந்த உத்தரவு தன்னிச்சையான முடிவு. வழக்கமான மரபுகளை மீறிய செயல். இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இந்நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், தங்களுக்கான பணிகளை தொடங்குவதா, வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் இருந்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தேடுதல் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகை சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் விவரங்கள் அடங்கிய அரசிதழை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் குழுவின் ஒருங்கிணைப்பாளராக வேந்தர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் சார்பில் மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் தீனாபண்டு, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் ஆகியோர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 6ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த செய்திக் குறிப்பில் இதே பெயர் கொண்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு பட்டியலில், 4வது உறுப்பினராக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரத்தூர் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினர் நிராகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் போக்கு இருந்துவரும் சூழலில், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்நாடு அரசின் அரசிதழ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்