மடிப்பாக்கத்தில் கத்தி முனையில் மிரட்டி மருத்துவரிடம் செயின் பறித்த மகாராஷ்டிரா குற்றவாளிகள் கைது

ஆலந்தூர்: மடிப்பாக்கம் கல்யாண கந்தசாமி தெருவை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி (23) கண் மருத்துவரான இவர், மடிப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் மூக்கு கண்ணாடி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முனபு, பைக்கில் வந்த 2 பேர், இந்த கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பாண்டி லட்சுமியை கத்தி முனையில் மிரட்டி, அவர் கழுத்தில் கிடந்த 1.5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து பாண்டி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று மடிப்பாக்கம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார், பெங்களூரு ராமன் நகர் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த குற்றவாளிகள் 2 பேரை கைது செய்து சென்னைக்கு கொண்டுவந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், குற்றவாளிகளில் ஒருவன் மகாராஷ்டிரா மும்பை மேற்கு பகுதியை சேர்ந்த குலாம் அப்பாஸ் (40), மற்றும் மகாராஷ்டிரா தானே பகுதியை சேர்ந்த சக்ளன்மஸ் லூம் (23) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செயின் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அதே நாளில் கொரட்டூரிலும் சங்கலி பறிப்பிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் வேறு ஏதாவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்