மடிப்பாக்கம், கீழ்க்கட்டளையில் கஞ்சா சாக்லெட் விற்ற வடமாநில வாலிபர் கைது: 13 கிலோ பறிமுதல்

ஆலந்தூர்: மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளில் கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பேருந்து நிலையப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று மாலை பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடங்களில் நேற்றிரவு மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். கீழ்க்கட்டளை பேருந்து நிலையத்தில் மூட்டையுடன் நுழைந்த வடமாநில வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அந்த மூட்டைக்குள் கஞ்சா சாக்லெட் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம், காஜாபடியை சேர்ந்த பாஸ்கர் மண்டல் (29) எனத் தெரியவந்தது. மேலும், இவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகள் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதி கடைகளில் விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒடிசா மாநில வாலிபர் பாஸ்கர் மண்டலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்