மத்தியபிரதேசத்தில் பரிதாபம்; கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் பலி: சாமி சிலை செய்த போது விபரீதம்

சாகர்: கோயிலை ஒட்டிய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் பலியாகினர். களிமண்ணில் கடவுள் செய்து கொண்டிருந்த போது நிகழ்ந்த இச்சம்பவம் மத்தியபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் உள்ள கோயிலில் புனித சாவன் மாதத்தையொட்டி நேற்று காலை களிமண்ணால் கடவுள் சிலை செய்யும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் களிமண் கொண்டு சிவன் சிலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது கோயிலை ஒட்டிய பாழடைந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து சிறுவர்கள் மீது விழுந்தது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு கோயிலில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் 9 சிறுவர், சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஆர்யா கூறுகையில், ‘‘குழந்தைகள் கோயிலுக்கு அருகே உள்ள கூடாரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும், மருத்துவமனையிலும் இறந்தனர். 2 சிறுவர்கள் அபாய கட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்றார்.

இறந்த குழந்தைகளில் பலரும் அவர்களின் பெற்றோருக்கு ஒரே குழந்தை. இதனால் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மோகன் யாதவ், பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், கோயில் அருகே பாழடைந்த சுவர் இருப்பதை கவனிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக பஞ்சாயத்தின் தலைமை நகராட்சி அதிகாரி மற்றும் துணை பொறியாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதோடு, மாநிலம் முழுவதும் பாழடைந்த கட்டிடங்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு