மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வரும் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மத்திய உணவு வழங்குவதற்காக உணவு சமைக்கும் சமையல் கூடமாக இருந்த கட்டிடத்தில் தற்பொழுது மதுராந்தகம் வட்டார கல்வி அலுவலகம் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு மதுராந்தகம் பகுதியில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். அதில், பெரும்பாலானோர் பெண் ஆசிரியைகள் ஆவர். இதனால் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், தற்பொழுது பருவமழை தொடங்கியுள்ளதால் இந்த வட்டார கல்வி அலுவலகம் முன்பாக மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. எனவே, அடிப்படை வசதி இன்றி பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகத்தை இடித்து அகற்றிவிட்டு அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

சிறுமிக்கு பாலியல் தொல்லை

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்