மதுக்கரை-நீலம்பூர் இடையே ரூ.400 கோடியில் பைபாஸ் ரோடு விரிவாக்க திட்டம்


கோவை: கோவை மதுக்கரை-நீலம்பூர் இடையே 26 கி.மீ. தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு கடந்த 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பைபாஸ் ரோட்டில் சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை கோவை-கேரளா இடையே முக்கிய வழித்தடம் இருக்கிறது. போக்குவரத்து வாகனங்கள் அதிகமானதால் இந்த பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து மெதுவாக செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக சிந்தாமணிப்புதூர் சிக்னல் பகுதியில் 3 கி.மீ. தூரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. இங்கே மேம்பாலம் கட்டாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதுள்ள இரு வழிப்பாதையை 6 வழிப்பாதையாக மாற்ற வேண்டும். கிழக்கு பைபாஸ் என்ற பெயரில் இந்த வழித்தடம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் சார்பில் பணிகள் நடத்தவும், விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயார் செய்யும் பணிக்கு டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடத்த வாய்ப்புள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘இப்போதுள்ள பாதையில் அதே கட்டமைப்பில் பணிகள் நடத்த முடியும். மேலும் தாராளமாக இட வசதி இருப்பதால் பணிகளை வேகமாக செய்து முடிக்க முடியும். பைபாஸ் ரோடு மேற்கு பைபாஸ் ரோட்டுடன் இணைக்க வைக்க வகையில் திட்டம் இருக்கும். நீண்ட காலமாக மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணமாக திருச்சி ரோடு வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் சுல்தான்பேட்டை, பல்லடம், செட்டிபாளையம் ரோட்டை பிரதானமாக பயன்படுத்தி வருகிறது.

பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்யும்போது இந்த வழியாக வாகனங்கள் குறைந்த நேரத்தில் நெரிசல் இன்றி சென்று வர முடியும். சுங்கம் வசூலிப்பது தொடர்பாக பல ஆண்டாக ரோடு விரிவாக்க பணி முடங்கியிருந்தது. இனி இந்த நிலைமை இருக்காது’’ என்றனர்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்