மாதவரம் – சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வழித்தடங்களில் இரட்டை அடுக்கு மேம்பாலம்: 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் மற்றும் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது.

குறிப்பாக போரூர் சந்திப்பு காரப்பாக்கம் ஆலப்பாக்கம் ஆழ்வார் திருநகர் வளசரவாக்கம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3.75 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த இரட்டை அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்காக பிரத்யேக ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட பாதையில் பணிகள் சி.4, சி.5 என பிரித்து நடைபெற்று வருகிறது. மொத்தமாக வரும் 140 தூண்களில் இதுவரை 156 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டது. மேலும் பாலத்தை தாங்கும் தூண்கள் அமைக்கப்படும் பணிகளும் தூண்கள் மீது இரும்பு பாலத்தை எடுத்து வைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த பாதையில் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 156 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தூண்களில் கர்டர்களை தூக்கி வைக்கும் பணிகளை நடந்து வருகிறது. சுமார் 2 ஆண்டுகளில் இந்த இரட்டை அடுக்கு மேம்பால பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆளப்பாக்கம் காரப்பாக்கம் வளசரவாக்கம் ஆகிய நிலையங்களில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதி அமைக்கும் பணிகளும் துவங்கிவிட்டது,’’ என்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை