மாதவரம் சட்டமன்ற தொகுதியில் போட்டி தேர்வு பயிற்சி மையம்: பேரவையில் சுதர்சனம் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் (திமுக) பேசியதாவது: சென்னை மாநகரில் 2 போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்களும், கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பயிற்சி மையங்களும் இப்போது இருக்கின்றன. சென்னை சுமார் 85 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாநகரம். பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும், அதாவது ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு குழுமம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்டவை நடத்தும் போட்டி தேர்வுகளில் நிறைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இப்போது பங்கு பெறுகிறார்கள்.

காவலர் பதவிக்குக்கூட இப்போது தேர்வு வைக்கிறார்கள். குரூப் 4, குரூப் 3, குரூப் 2 ஆகிய பதவிகளுக்காக இப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் இருக்கின்ற தேர்வு பயிற்சி மையங்கள் போதுமானதாக இல்லை. ஆகவே, ஏழைஎளிய மக்கள் வசிக்கின்ற மாதவரம் தொகுதியில், இதுபோன்ற பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டால், ஏழை எளிய மாணவர்கள் பயிற்சி பெற்று வேலைக்கு செல்லக் கூடிய வாய்ப்பு பெருகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை தருவதற்கு, முதல்வர் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்களுக்கு உறுதுணையாக இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பதில் அரசு ஆர்வம் காட்டியிருக்கிறது. எதிர்காலத்தில் அத்தகைய தேவைகளை கூடுதலாக உருவாக்க வேண்டிய சூழல்கள் ஏற்படுமேயானால், அப்போது உறுப்பினருடைய கோரிக்கையை அரசு நிச்சயமாகக் கனிவோடு கவனிக்கும்,’’ என்றார்.

மாதவரம் எஸ்.சுதர்சனம்: கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெரிய அளவில் சென்னை மாநகரில் உள்ள இளைஞர்களுக்கு தற்போது பயன்பட்டு வருகிறது. ஆனால், அந்நூலகம், தென் சென்னையில் தூரத்தில் அமைந்துள்ளது. எனவே, வட சென்னையில் அதுபோன்ற பெரிய அளவிலான ஒரு நூலகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். குறிப்பாக மாதவரம் போன்ற பகுதியில் இதுபோன்ற ஒரு நூலகத்தை அமைத்துத் தர வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: வடசென்னை வளர்ச்சியில் முதல்வர் தலைமையிலான திமுக அரசு மிகுந்த அக்கறையும், ஆர்வமும் கொண்டிருக்கிறது. எனவேதான், வட சென்னை வளர்ச்சிக்காக ஒரு தனித் திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கான உரிய நிதி ஒதுக்கீடுகளுடன் அத்திட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. உறுப்பினர் குறிப்பிட்டிருப்பதைப் போல, சென்னை, மதுரை மட்டுமல்லாமல், கோவையிலும், சேலத்திலும் அத்தகைய அறிவுசார் மையங்கள், நூலகங்கள் திருச்சியில் அமைக்கப்பட இருப்பதைப்போல அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.

அந்த வகையில், நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்கு உறுப்பினரின் கோரிக்கை எடுத்துச் செல்லலப்பட்டு, எதிர்காலத்தில் அது உரிய வகையில் பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related posts

மாவட்டத்தில் 2ம் கட்டமாக நடைபெறும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: 526 கிராம ஊராட்சிகளில் 3 கட்டமாக 78 முகாம்கள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது

மதுராந்தகம் நகராட்சியின் 50ம் ஆண்டு பொன்விழா கூட்டம்