காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான மபி காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி பாஜவில் தஞ்சம்: முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களும் பாஜவில் ஐக்கியம்

போபால்: மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ் பச்சோரி நேற்று பாஜவில் இணைந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் பலரும் பாஜவில் சேர்ந்தனர். மத்தியபிரசேத்தை சேர்ந்த சுரேஷ் பச்சோரி(71). காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான இவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதுகாப்புத்துறை இணைஅமைச்சராக பதவி வகித்துள்ளார். மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவராக சுரேஷ் பச்சோரி பதவி வகித்தபோது கட்சியின் நன்மைக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த பச்சோரி, 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சுரேஷ் பச்சோரி, நேற்று மத்தியபிரதேச பாஜ தலைமை அலுவலகத்தில் முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜ தலைவர் வி.டி.சர்மா மற்றும் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் பாஜவில் இணைந்தார்.
இதேபோல் பழங்குடியினத்தை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான கஜேந்திர சிங் ராஜூகேடியும் நேற்று பாஜவில் சேர்ந்தார்.

இவர் 1998, 1999 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் 3 முறை தார் (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) மக்களவை தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரசில் சேர்வதற்கு முன் 1990ல் பாஜ சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கஜேந்திர சிங் ராஜூகேடி மீண்டும் பாஜவில் சேர்ந்துள்ளார். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கைலாஷ் மிஸ்ரா, அதுல் சர்மா, அலோக் சன்சோரியா, சஞ்சய் சுக்லா, அர்ஜூன் பாலியா, விஷால் படேல் ஆகியோரும் நேற்று பாஜவில் இணைந்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி