ரூ.2.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை திறந்து வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதன் வாயிலாகவும், பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாகவும் பரந்த மற்றும் பன்முகத்தன்மையுடைய அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா உழைக்கும் வகுப்பினரின் நலனை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றி வருகிறது.

மேலும், தொழிலாளர்களை பாதுகாத்தல், நியாயமான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடத்தை உறுதி செய்வதன் வாயிலாக உற்பத்தியை பெருக்குதல், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல், துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 50 சென்ட் நிலப்பரப்பில், 10,600 சதுர அடி கட்டடப் பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன், 2 கோடியே 40 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வளாகத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்கள் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களான தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவை அமையப் பெற்றுள்ளன. இதன்மூலம், பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்களை அளிக்கவும், 18 உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிக்கவும், புதிதாக பதிவு செய்யவும், பணப்பயன்களைப் பெறவும் ஏதுவாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வெ. கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முகமது நசிமுத்தின், முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்