காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது அந்தமான் அருகே இன்று புயலாக மாறுகிறது: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று அந்தமான் அருகே புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் முதல் அதற்கும் மிக அதிகமாக வெப்பம் அதிகரித்தது. கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் வேலூர் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதற்கு மாறாக 7 மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட குறைவாக வெப்பம் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றுள்ளது. இது இன்று தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுப்பெற்று 11ம் தேதி வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு கிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம்-மியான்மர் கடற்கரை நோக்கி நகரும். இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட புயல் சின்னம் காரணமாக இன்று தொடங்கி 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வெப்ப நிலையை பொறுத்தவரையில் படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். வங்கக்கடலில் புயல் சின்னம் இருப்பதால், கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகம் முதல் 70 கிமீ வேகம் வரை வீசும். நாளை 75 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை