சாலையைவிட தாழ்வான வீட்டை ஜாக்கி கொண்டு உயர்த்தியபோது பக்கத்து கட்டிடத்தின் மீது சாய்ந்தது: மாநகராட்சி மூலம் வீடு இடித்து அகற்றம்

திருமலை: ஐதராபாத்தில் சாலையைவிட தாழ்வான வீட்டை ஜாக்கி கொண்டு உயர்த்தியபோது பக்கத்து கட்டிடத்தின் மீது வீடு சாய்ந்தது. முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை இடித்து அகற்றினர். ஐதராபாத்தில் உள்ள சிந்தல் அடுத்தனிவாஸ் நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி அதில் வசித்து வந்தார். வீட்டில் நாகேஸ்வர ராவ் உள்பட 6 குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நாளடைவில் அப்பகுதியில் சாலை உள்ளிட்ட அத்தியாவசிய பணி மேற்கொண்டதால் வீட்டின் உயரம் குறைந்து சாலையை விட தாழ்வாக சென்றது. இதனால் மழை காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க வீட்டின் உயரத்தை உயர்த்த நாகேஸ்வர ராவ் முடிவு செய்துள்ளார்.

அதற்காக, விஜயவாடாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் கடந்த சனிக்கிழமை பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், வீட்டின் உயரத்தை அதிகரிக்க அதன் அடிப்பகுதியில் ஹைட்ராலிக் ஜாக்கிகள் பொருத்தப்பட்டு ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென சில ஜாக்கிகள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஜாக்கி மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடு எதிர்பாராத விதமாக பக்கத்து கட்டிடத்தின் மீது சாய்ந்தது. இதுகுறித்து ஐதராபாத் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு, கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ள வீட்டை முற்றிலும் இடிக்க முடிவு செய்தனர். அதைதொடர்ந்து, நேற்று காலை வீட்டை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி