குறைந்த காற்றழுத்தம் இன்று வங்கக்கடலில் உருவாகிறது: 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் இன்று உருவாகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 3ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்தம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்கப்படுகிறது. இதன் காரணமாக, கடல் பகுதியில் இருந்து ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, சேலம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கோவை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வேகத்தில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரையிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இதே நிலை செப்டம்பர் 1ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!