சென்னையில் அடுத்த மாதம் முதல் தாழ்தள பேருந்துகள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த மாதம் முதல் தாழ்தள பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை கடந்த 2018ம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், முதலில் தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு அதிக செலவு ஆவதோடு, தாழ்வான படிக்கட்டுகளால் மழை நீர் எளிதில் புகும் என்பதாலும் குறுகலான சாலைகளில் இயக்குவது சிரமம் என்பதால் இந்த பேருந்துகளை வாங்கவில்லை என்று வாதிடப்பட்டது.
எனினும், தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறைந்தபட்சம் 350 பேருந்துகளை இயக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது. இந்த நிலையில் தற்போது, சென்னை குரோம்பேட்டை பணிமனையில் தாழ்தள பேருந்துகளுக்கான இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த பேருந்தில் 70 பயணிகள் வரை பயணம் செய்யலாம். 35 இருக்கைகள் உள்ளன.

தற்போது ஆர்.டி.ஓ உள்ளிட்ட சில நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் சிரமம் இன்றி பேருந்துகளில் ஏறும் விதமாக இருக்கும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பாக தாழ்தள சொகுசு பேருந்துகள் 21ஜி- (தாம்பரம் – பிராட்வே), 576 (காஞ்சிபுரம் – சைதாப்பேட்டை), மற்றும் 114 (கோயம்பேடு – ரெட்ஹில்ஸ்) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டன. வேகத்தடை இல்லாத பிரதான சாலைகளில் மட்டுமே இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மட்டும் இன்றி கோவை மற்றும் மதுரை போக்குவரத்து கழகத்திலும் கணிசமான எண்ணிக்கையில் தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி