காதல் மனைவியை மீட்டு தரகோரி காவல் நிலையம் முன்பு தீக்குளித்த டிரைவர்

அந்தியூர்: காதல் மனைவியை மீட்டு தரக்கோரி அந்தியூர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை குடிபோதையில் வந்த நபர் திடீரென காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அனைத்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்தையா (35) என்பதும், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் வந்து தங்கி ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் முத்தையா தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது மனைவி மணியாவுடன் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், மணியாளும் அவரை விட்டு பிரிந்து செல்லவே அவரை கண்டுபிடித்து தருமாறு நேற்று முன்தினம் காவல் நிலையம் வந்துள்ளார். 2வது நாளாக அதுகுறித்து கேட்பதற்காக நேற்று குடிபோதையில் காவல் நிலையத்திற்கு வந்தார். திடீரென காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர், காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முத்தையாவிற்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை