தாமரை தலைவர்களின் கோஷ்டி பூசல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கட்சியின் ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், மாநில தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் எந்த மாவட்டத்தில் கொடிகட்டி பறக்குது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் தாமரை கட்சியில் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டு இரண்டு மாவட்ட தலைவர்கள் இருக்காங்க. இதுல மாநில தலைவர் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், ஒன்றிய அமைச்சர் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும் இருக்காங்க. ஒன்றிய அமைச்சரை மாநில தலைவர் ஆதரவாளர்கள் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல தாமரை கட்சியின் மாநில தலைவரை ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்கள் கண்டு கொள்வதில்லையாம். இதனால மாவட்டத்துல நடக்கிற நிகழ்ச்சிகளில இரண்டு குரூப்பும் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதோடு எதிர்ப்பும் தெரிவிக்கிறாங்களாம். இதனால மாநில தலைவர் ஆதரவாளர்களான 2 மாவட்ட தலைவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் தொடர்ந்து அவர்களுக்கு எதிராகவும் செயல்படுறாங்களாம். இதனால் இந்த 2 புதிய தலைவர்கள் கட்சியில் எந்தவித முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறார்களாம். இவர்களுக்குள் உள்ள கோஷ்டி பூசலால் மன்னர் மாவட்டத்தில் பெரும் புகைச்சலே ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள். தலைமைதான் எங்களுக்கு பதவி கொடுத்துள்ளது. இதற்காக மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட முடிவு செய்து நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைத்து செயல்பட்டு வருகிறோம். இது ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு பிடிக்க மாட்டுங்குது.

கட்சிக்குள்ளே கோஷ்டி பூசல் இருக்க கூடாது என நினைத்து நாங்களும் பொறுமை இருந்து விட்டோம். இனியும் இருக்க முடியாது என முக்கிய நிர்வாகிகளிடம் பொங்கியுள்ளனர். இதற்கு அவர்களும் பொறுமையாக இருங்கள். மேலிடம் வரை தகவல் சென்றுள்ளதால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொன்னாங்களாம். ஆனால் இதுவரையிலும் எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லாததால் இந்த பிரச்னை மாநில தலைவர் மூலம் டெல்லிவரை புகார் மனுவாக கொண்டு ேபானாங்களாம். டெல்லி தலைமையும் இதுகுறித்து விசாரிக்க தொடங்கியுள்ளதாக மாநில தலைவர் தரப்பு மூலம் மாவட்ட தலைவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாம். ஆனால் ஒன்றிய அமைச்சர் ஆதரவாளர்களோ டெல்லியில் உள்ளவர்களுக்கு வேற வேலை இல்லைபாரு. இவர்களது புகாரை விசாரிக்க தான் வேலையா என கமெண்ட் அடித்தார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கடலோர மாவட்டத்தில் அதிரடிக்கு தயராகிவிட்ட காக்கி அதிகாரி பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்துக்கு சமீபத்தில் எஸ்.பி.யாக பொறுப்பேற்ற சுந்தரமானவர், அதிரடி காட்ட தொடங்கி விட்டாராம். அந்த மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகள் அதிகம் கொண்ட சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.யை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றினாராம். இந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருக்காம். ஆனால் சரியான ஆதாரம் சிக்காமல் தப்பி வந்த இன்ஸ்பெக்டர், சமீபத்தில் போலீஸ் விரித்த ஒரு பொறியில் சிக்கி கொண்டுள்ளாராம். இதற்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ.க்கும் தண்டனையை கழித்து வருகிறாராம். இந்த மாவட்டத்தில் எஸ்.பி.யாக பொறுப்பேற்ற இரு வாரங்களிலேயே அதிரடி காட்ட தொடங்கி இருப்பதால் மற்ற இன்ஸ்., எஸ்.ஐ.க்கள் கலக்கத்தில் உள்ளார்களாம். எல்லாரையும் பற்றிய லிஸ்ட் என்னிடம் இருக்கு. சரியாக வேலை பாருங்க என ஏற்கனவே தான் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எச்சரித்து உள்ளாராம். அடுத்த கட்டமாக ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் தொடர்பான பட்டியலை எஸ்.பி., ஏட்டுக்கள் கிட்ட கேட்டு இருக்கிறாராம். வேலையில் கோல்மால், லஞ்சம் என எது இருந்தாலும் மறைக்காமல் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம். அதன் படி தற்போது எஸ்.பி. ஏட்டுக்கள் பட்டியல் கொடுத்து இருக்கிறார்களாம். தீபாவளிக்கு பிறகு, அந்த மாவட்ட காவல்துறையில் பல சரவெடிகள் கேட்கும் என போலீஸ் எட்டுக்கள் பேசிக் கொள்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொழிலதிபர் எங்க போவார்னு தெரியலையேனு தாமரை பார்ட்டி தவிக்குதாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் தொகுதியில் மூன்று எழுத்து பெயர் கொண்ட தொழிலதிபரான ஒரு கட்சியின் நிறுவனர் தாமரை கூட்டணியில போட்டியிட உள்ளாராம். இதற்காக கடந்த சில மாதங்களாக அவரு தேர்தல் பணியாற்றி வருகிறார். மேலும் தன்னுடைய சமுதாய மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறாராம். இதுதவிர பொதுமக்களிடம் தன்னுடைய பெயரை கொண்டு சேர்க்கும் வகையில மருத்துவ முகாம்களை நடத்திட்டு இருக்கிறாராம். இது ஒருபுறம் இருக்க கட்சி தொடங்கப்போவதாக கூறப்படும் 3 எழுத்து நடிகரின் இயக்கத்தின் சார்பில் வெயிலூர்ல அன்னதானம் வழங்கப்பட்டாதாம். இந்த விழாவுல கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்துகிட்ட மூன்று எழுத்து கொண்ட தொழிலதிபரின் போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்கள்ல வைரலாகி வருது. இதுனால நடிகர் கட்சி தொடங்குனா, தொழிலதிபர் அந்த பக்கம் போய்டுவாரோன்னு வெயிலூர்ல பரபரப்பா பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகர பல்கலை கழகத்தில் தாமரை கட்சி உத்தரவுக்கு பயப்படுகிறார்களாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகம் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாதது. இங்கு இருக்கும் துணை அரசரோ பிரச்னைகளை தீர்த்து பல்கலைக்கழகம் நல்ல முறையில் செயல்பட தன்னுடைய கவனத்தை செலுத்தாமல் தாமரை கட்சி உத்தரவை அமல்படுத்துவதில் மட்டுமே கவனத்தை செலவிடுகிறார். குறிப்பாக மாணவர்கள் நலன் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுக்காமல் நிதி நெருக்கடியை முறையாக கையாளாமல் அந்த சுமையை, கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை பல மடங்கி உயர்த்திவிட்டதாக மாணவர்கள் புலம்புறாங்க. அதேபோல் பல்கலையில் சாதாரண முறையில் சான்றிதழ் பெறுவது ஒரு மலையை புரட்டி போடும் அளவிற்கு கடுமையானதாகும். தட்கல் முறையில் பணம் கட்டினால் ஒரே நாளில் கிடைக்கும் சான்றிதழ், சாதாரண முறையில் பணம் கட்டினால் பல மாதங்கள் ஆகும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சிலர், மாணவர்களிடம் சான்றிதழ் பெற கடுமையான வசூல் வேட்டையில் இறங்கி, பேரம் பேசி வசூல் செய்து ஓரிரு நாட்களில் சான்றிதழ் பெற்று தருகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெற வருபவர்கள் துணை அரசரிடம் புகார் கூறினாலும் அதை அவர் கண்டுகொள்வதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மாணவர் நலனை புறந்தள்ளி விட்டு தாமரை கட்சி கட்டளையை மட்டும் செயல்படுத்தி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்