தாமரையில் இருந்து தாவி இலை வேட்பாளரானவர் இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நடுத்தெருவில் நிற்க வைத்துவிடுவார்கள் என கட்சி நிர்வாகிகளை நம்பாமல் சொந்த கார் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினாராமே மாஜி அமைச்சர்…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலைக்கட்சி சார்பில் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்த காக்கிகள் அனுமதி கொடுக்காததால் நிர்வாகிகள், தொண்டர்கள் கீழே நிற்க ‘மணியானவர்’ மட்டும் தனது சொந்த கார் மீது ஏறி நின்னு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாராம்… மற்றவர்கள் கார் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் திடீரென காரை எடுத்துச் சென்று தன்னை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவாங்க.. அதனால்தான் சொந்த கார் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன்னு அங்கிருந்த நெருங்கிய ஆதரவாளர்களிடம் கூறினாராம்…

மாஜி அமைச்சர் ஒருவரின் இல்ல விழாவில் சேலத்துக்காரர் கலந்து கொண்ட பின்னர் கடலோர மாவட்டத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்காம்.. கட்சி நிகழ்ச்சிகளில் மாஜி அமைச்சர் கலந்துகொண்டால் அவர் பெயரை கூட மைக்கில் சொல்லாதவர்கள் இன்று அவருக்கு வணக்கம் சொல்லி அவரை வரவேற்கிறார்களாம்… அதனால் தான் ‘மணியானவர்’ கட்சியில் உள்ள நிர்வாகிகளை நம்பாமல் தனது சொந்த கார் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காருன்னு அங்கிருந்த தொண்டர்கள் பேசிக்கிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆர்ப்பாட்டத்துக்கு வந்து காத்திருந்த முரசு கட்சிக்காரங்க கடுப்பாகி ஆட்டோ பிடிச்ச கதை தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘முரசு கட்சி சார்புல ஸ்டேட்ல ஆர்ப்பாட்டம்னு அறிவிச்சாங்க. அதேபோல, வெயிலூர் மாவட்டத்துலயும் ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு நடக்குதுன்னு கட்சிக்காரங்களுக்கு தெரிவிச்சிருந்தாங்களாம்..

இதனால முரசு கட்சியில இருந்து கொஞ்ச பேரு ஆர்ப்பாட்டம் நடக்குற இடத்துக்கு வந்திருந்தாங்க.. ஆனா டிஸ்ட்ரிக் செக்ரட்ரிகளும், முக்கிய நிர்வாகிகளும் அங்க வர்றதுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சாம்.. இதனால, ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கொஞ்ச பேரும் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனாங்களாம்.. அட இதுக்கு அப்புறமும் காத்திருப்பதான்னு சொல்லிக்கிட்டே, ஆட்டோவை பிடிச்சு ஏறி வீட்டுக்கு போக புறப்பட்டுட்டாங்களாம்.. அப்போ தான், கார்ல டிஸ்ட்ரிக் செக்ரட்ரிகள் 2 பேரும் வந்து இறங்கினாங்களாம்.. அப்புறம் கடமைக்கு கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் நடந்துச்சாம்.. ஆட்டோல ஏறுனவங்க, சிலரு என்ன நினைச்சாங்களே ஆர்ப்பாட்டத்துலயே கலந்துக்கவில்லையாம்.. இருக்குறவங்கள வெச்சி ஆர்ப்பாட்டம் நடந்துச்சாம்.. இப்ப இருக்குற நிலைமைக்கு கட்சியில நிர்வாகிகள் இருக்குறதே பெரிய விஷயம்.

இப்படி 4 ஆர்ப்பாட்டம் நடத்துனா? முரசு கட்சி ஒரே நாள்ல மூழ்கிடும்னு கட்சிக்காரங்களே செக்ரட்ரிகளை திட்டி தீர்த்தாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பினாமிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு பல கோடி ரூபாய்க்கு ஊராட்சி பணிகளை கான்டிராக்ட் எடுத்து கட்டிங் பார்த்து வரும் பொறியாளர் பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கழுகுக்கு புகழ்பெற்ற சிவத்தலம் உள்ள ஒரு ஒன்றியத்தில் ஜெவில் ஆரம்பித்து சன்னில் முடிகிற முன்னாள் அமைச்சர் பெயர் கொண்ட இளம் வயது ஒன்றிய பொறியாளர் பணிபுரிகிறாரு.. இவரு தனக்கு வேண்டிய சிலரை பினாமியா வைச்சுக்கிட்டு, ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கான பல கோடி திட்டப் பணிகளை கான்டிராக்ட் எடுத்து செய்கிறாரு.. அதுவும் அலுவலகத்துக்கே வராம பேன்சி நம்பர் கொண்ட காரில் வலம் வந்து, கான்டிராக்ட் வேலைகளையெல்லாம் எடுப்பது,

அது தொடர்பாக கட்டிங் பேசுவது, அதுக்காக லாட்ஜ்களில் சிட்டிங் என்றே நாள் முழுக்கு பிசியாவே இருக்கிறாரு… அதுமட்டுமின்றி இவர் எடுத்து செய்யுற வேலைகளில்லாமல் வேறு சில திட்டப் பணிகள் சம்பந்தமா யாராவது இவரை பார்க்க வந்தா, கலெக்டர் மீட்டிங், உதவி இயக்குனர் மீட்டிங் என கலர்கலரா ரீல் விடுவதை வாடிக்கையா வச்சிருக்காராம்.. இவர் அதிகாரி என்பதால கான்டிராக்ட் காரங்க உள்பட அனைத்து தரப்பினரும் இந்த விஷயங்களை யாரிடம் சொல்வதுனு தெரியாம விழிபிதுங்கி இருக்கின்றனராம்.. திட்டப் பணிகளை பார்வையிட்டு, அதன் தரங்களை பரிசோதித்து, பணிகளுக்கான பில் போடுவது என்பது பொறியாளரின் வேலை. ஆனா இங்க பொறியாளரே பினாமி பெயரில் கான்டிராக்ட் வேலை எடுத்து அவரது வேலைக்கு அவரே பில் போட்டு எடுத்துக்கொள்கிறாராம்.. அந்த வேலையின் தரம் எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்க என்று புலம்புகின்றனர் பொதுஜனங்கள்…’’ என முடித்தார் விக்கியானந்தா.

‘‘தாமரையில் இருந்து 3 மாதத்திற்கு முன் இலைக்கட்சிக்கு தாவியவர் நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு கட்சிக்காரங்க யாரிடமும் தொடர்பில்லாமல் இருக்கிறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஆற்றலானவர் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட யாரிடமும் தொடர்பு கொள்ளவில்லையாம்.. எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, ஜெயித்தாலும், தோற்றாலும், தேர்தல் வேலை செய்த கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பது வழக்கம். ஆனால், ஆற்றலானவர் கூட்டம் நடத்தவோ, நன்றி தெரிவிக்கவோ முன்வரவில்லையாம்.. இது, கட்சி நிர்வாகிகள் மற்றும் ெதாண்டர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறதாம்.. இதற்கிடையில், கட்சியின் மா.செ. தரப்பில் இருந்து ஆற்றலானவரை தொடர்புகொண்டு, இதுபற்றி எடுத்துக்கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லையாம்.. தாமரை கட்சியில் இருந்த இவர், தேர்தலுக்கு 3 மாசத்திற்கு முன்புதான் இலைக்கட்சிக்கு தாவினார்.

சேலம் விஐபியின் விருப்பத்தின்பேரில் இவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது. இவர் மேலிடத்தில் தொடர்பு வைத்துக்கொண்டு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அனுசரித்து செல்லாதது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்காம்.. இந்த சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து இலைக்கட்சியினர் மஞ்சள் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அவர் ஆர்ப்பாட்டத்திற்கும் செல்லவில்லை. தலைமை வகித்த `ரெட்போர்ட்’ விஐபியிடம், கட்சி நிர்வாகிகள் ஆற்றலானவரின் நடவடிக்கைகள் குறித்து புகார் கூறி இருக்காங்களாம்.. அவர், “பார்ப்போம்… கட்சியின் மேலிடத்துக்கு தகவல் கொண்டுபோகிறேன்னு ஆறுதல் சொல்லியிருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

டெல்லி, ஷீரடி, ஐதராபாத் செல்லும் 12 விமானங்கள் திடீர் ரத்து

சிறிய வகை கட்டிடங்களுக்கான பணி நிறைவுச்சான்று பெறுவதில் இருந்து விலக்கு: அரசாணை வெளியீடு

காசா மருத்துவமனை இயக்குனர் 7 மாதங்களுக்கு பின் விடுதலை: இஸ்ரேல் ராணுவம் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு