தாமரைக்கு தாவி சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்த அம்மணி கேபினட் ஆசையில் மிதப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தோல்விக்கான காரணங்களை கண்டுபிடிச்சி களையெடுக்கணும்னு இலைக்கட்சியில குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்காமே…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மக்களவை தொகுதியில் இலைக்கட்சி வேட்பாளர் படுதோல்வியை சந்தித்துள்ளார். மொத்தம் 1.17 லட்சம் வாக்குகளே பெற்று டெபாசிட்டையும் பறிகொடுத்ததுதான் மிச்சம்.. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இலை பெரும்பாலான பூத்களில் சொற்ப வாக்குகள் மட்டுமே வாங்கியிருக்கு.. ஒற்றை, இரட்டை இலக்கு எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி உள்ளது.. ஒவ்வொரு சுற்றும் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் கொடுத்திருக்கு… ஒரு சுற்றில் கூட 10 ஆயிரம் வாக்குகள் கிடைக்கவில்லை. முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் உள்ள பகுதிகளில் கூட வாக்குகளை பெற முடியாம போயிட்டுது.. காலையில் பச்சை துண்டுகளுடன் உற்சாகமாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த முகவர்கள் மதியத்திற்கு பிறகு சுடச்சுட மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு சோகமாக சென்றுவிட்டாங்க..
இந்த தொகுதியில் மொத்தமாகவே 10 சதவீதம் வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளதால் அதிமுக எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளதாம்.. விலைபோன கட்சி நிர்வாகிகளை கண்டுபிடித்து அவர்களின் பதவியை பறித்தால்தான் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால் இலை கட்சி மிகவும் மோசமான நிலைக்கு தான் தள்ளப்படும்.. தோல்விக்கான காரணங்களை கண்டுகொள்ளவில்லை என்றால் கட்சியும் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக அதிமுக தொண்டர்கள் ரொம்ப கவலை அடைந்து இருக்காங்களாம்… உடனடியாக கட்சி தலைமை தவறு செய்த நிர்வாகிகளை களையெடுக்கணும்னு ரத்தத்தின் ரத்தங்கள் குரல் ஒலிக்க தொடங்கியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர்காரர் தோல்விய பலா பழக்காரர்களும், பலா பழக்காரர் தோல்வியை குக்கர் தரப்பும் மகிழ்ச்சியா கொண்டாடுதாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஓ தெரியும்… ஹனிபீ மாவட்டம் சொந்த மாவட்டமாக இருந்தாலும், குக்கர் தலைவர் ஹனிபீயில போட்டியிட்டதால பலாப்பழக்காரர் கடலோர மாவட்டத்திற்கு போய் போட்டியிட்டாரு.. இந்த கோபத்தில் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் ஹனிபீ தொகுதியில் தேர்தல் வேலையே பார்க்காம கடலோர மாவட்டத்திற்கு தேர்தல் முடியும் வரை போயிட்டாங்க.. ஹனிபீ உள்ளூர் பலாப்பழக்காரர்களும் குக்கருக்கு ஆதரவாக எந்தவேலையும் செய்யாமல் அமைதி காத்துட்டாங்க.. பலாப்பழக்காரர் ஹனிபீயில போட்டியிட்டிருந்தா ஜெயித்திருப்பார், அவர இங்க போட்டியிட விடாம குக்கர் தலைவர் ஹனிபீயில போட்டியிட்டதால ஜெயிக்கறது கஷ்டம்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.. இதனால் கடுப்பில் இருந்த குக்கர் காரங்க, வாக்கு எண்ணிக்கைக்கு பலாப்பழ ஆதரவாளர்கள் யாரையும் முகவர்களாக கூப்பிட்டு போகல.. குக்கர் தரப்பு ஆதரவாளர்கள மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்கு கூட்டிட்டுப்போனாங்க.. வாக்கு எண்ணிக்கையில ஹனிபீ தொகுதியில குக்கர் தலைவர் தோல்வியுற…. சோகத்தில் ஆழ்ந்த குக்கர் ஆதரவாளர்கள், கடலோர மாவட்ட தொகுதியில பலாப்பழக்காரர் தோல்வின்னு வந்த செய்திகளை பார்த்துட்டு உற்சாகமடைந்தாங்களாம்.. ஹனிபீ தொகுதியில போட்டியிட்டா நாங்க ஜெயிச்சிருப்போமுன்னு மார்தட்டின பலாப்பழம் கடலோர மாவட்ட தொகுதியில வெம்பிப்போச்சேன்னு சொல்லி கிண்டல் அடிச்சத வாக்கு எண்ணிக்கை மைய பகுதியில் இருந்த பிற கட்சி முகவர்கள் ரசித்தாங்களாம்.. இந்நிலையில், ஹனிபீ மாவட்டத்தில் பலாப்பழக்காரர் தோல்வியை குக்கர் தரப்பும், குக்கர் தலைவர் தோல்வியை பலாப்பழக்காரர் தரப்பும் மகிழ்ச்சியாக கொண்டாடிக்கிட்டு இருக்காங்களாம்.. ஒண்ணா சேர்ந்தது மாதிரி காட்டிக்கிட்டாலும், இருதரப்பும் இன்னமும் பழிவாங்கும் போக்கோடுதான் இருக்காங்கன்னு ஹனிபீ தொகுதியில டாக் ஓடிக்கிட்டு இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேட்பாளர் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் குறித்து சேலத்துக்காரரை சந்தித்து மாஜி அமைச்சர் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மக்களவை தேர்தலில் கடலோர தொகுதியில் இலை கட்சி சார்பில் போட்டியிட தனக்கு வேண்டிய நெருக்கமான நபரை மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ நிறுத்தி இருந்தாரு.. ஆனால் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் படுதோல்வியை சந்தித்தார். தேர்தல் ரிசல்ட் முன்னதாகவே வேட்பாளருக்கு தெரிந்து விட்டதால் அவரை தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லையாம்…. இதேபோல் தேர்தல் முடிவு அறிவித்தபோது கூட மணியானவர் வெளியே தலைகாட்ட வில்லையாம்.. தேர்தல் முடிவு என்ன என்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதால் அவர் வெளியே தலைகாட்ட வில்லையாம்… தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தும், இதற்கான சதிவேலையில் கட்சிக்குள்ளே ஈடுபட்ட நிர்வாகிகள் குறித்தும் ஆதாரத்துடன் சேலத்துக்காரரை நேரில் சந்தித்து கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான வேலையில் அவர் இறங்கி விட்டாராம்.. மாஜி அமைச்சருக்கு எதிராக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அவரை பற்றி சேலத்துக்காரருக்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பவும் முடிவு செய்துள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரைக்கு தாவி சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்த அம்மணி கேபினட் ஆசையில் மிதக்கிறாங்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தலில் கடலோர தொகுதியில் பொன்னானவரின் தோல்வியால் அம்மணி ஒருவர் ரொம்ப உற்சாகமாக இருக்கிறாராம்.. மாற்று கட்சியில் இருந்து தாமரை கட்சியில் ஐக்கியமான அந்த அம்மணி, தனக்கு எம்.பி. தேர்தலில் சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்து இருந்தாங்க.. ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல், பொன்னானவரே போட்டியிட்டாரு.. அவரு தோல்வி அடைந்து விட்டதால், இனி அவருக்கு வாய்ப்பு இருக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறதாம்.. ஏற்கனவே தான் இருந்த பெரிய பதவியை உதறி விட்டு, தாமரை கட்சியில் அம்மணி வந்ததால், இப்போது மிகப்பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்ற ஆசையில் இருக்கிறாராம்.. அதுவும் சின்ன சின்ன ஆசையெல்லாம் இல்லையாம்.. ஒன்றியத்தில் கேபினட் அமைச்சர் ஆசையில் உள்ளதாக பேசிக்கிறாங்க.. நாடாளுமன்ற தேர்தலில் தாமரையில் யாரும் ஜெயிக்கவில்லை. எனவே நியமன எம்.பி. கொடுக்கும் போது, எனக்கு கண்டிப்பாக கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் பேசி வருகிறாராம்.. அப்படி கிடைச்சிட்டா, குமரி மாவட்ட தாமரை அரசியல் தன்னை மையப்படுத்தியே இருக்கும் என்றும் நம்புகிறாராம்.. அதுமட்டுமில்ல, பொன்னானவர் தோல்வியால், இந்த முறை சீட் கேட்டு ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு உள்ளுக்குள் ரொம்ப சந்ேதாசம் தானாம்.. கண்டிப்பாக அடுத்த முறை நமக்கு சீட் கிடைக்கும்னு இப்போதே கனவு காண ஆரம்பிச்சிட்டாங்களாம்.. இருப்பினும் சந்தோஷத்தை வெளி காட்டாம, அண்ணாச்சி ஜெயித்து இருந்தால் நல்லா இருந்துருக்கும்னும் பேசிக்கிறாங்களாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை