தேர்தலில் தோற்பதற்கென்றே ஆள் பிடிக்கும் கட்சி பாஜ: கவிஞர் காசி முத்துமாணிக்கம் கலாய்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இதில், திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசியதாவது: ஒன்றிய பாஜ ஆட்சியில், ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் என்று சிஏஜி அறிக்கை கூறியும், துண்டைக் கூட உதறாமல் வெட்கமில்லாமல் பிரதமர் மோடி உலா வருகிறார். தேர்தலில் தோற்பதற்கென்றே ஆள் பிடிக்கும் கட்சியாக பாஜ உள்ளது. தேர்தலில் தோற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் ஆகியோருக்கு கவர்னர் பதவி. சட்டமன்ற தேர்தலில் தோற்ற எல்.முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி. இப்படி ஒரு விந்தையான கட்சி, சந்தையில் கேவலமான கட்சி. யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி தெளிவாக உள்ளது.

தலித்துகளை தாங்குவது போன்று பிரதமர் பேசுகிறார். 1980ல் ஜெகஜீவன் ராம் பிரதமர் என்ற போது எதிர்த்து வாக்களித்தவர்கள் தான் பாஜவினர். சாதியை தூண்டி வாக்கு பெறும் தரம் தாழ்ந்த அரசியல் தமிழகத்தில் எடுபடாது. இது பெரியார் பூமி. பாஜவில் மண்டல தலைவர், மாவட்ட, மாநில, தேசிய தலைவர் தொடர்ந்து இரண்டு முறை வரக்கூடாது என்பது அக்கட்சியின் சட்டம். வட்டார தலைவரே இரண்டு முறை வரக்கூடாது என்றால் பிரதமராக மோடியை மட்டும் 3வது முறையாக போட்டியிட அனுமதிக்கலாமா?. ஒரே நாடு ஒரே இந்தியா என ஒரே தேர்தலுக்கு வழி வகுக்கிறார்கள். மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்தால் ஒன்றிய அரசுக்கு தேர்தல் நடத்த வேண்டும். அப்போதெல்லாம் இந்தியா முழுவதும் தேர்தல் நடக்குமா? முட்டாள்தனமாக தெரியவில்லையா?. தேர்தல் பத்திரம் என்கிற லஞ்சம் பெறும் கேடு கெட்ட திட்டத்தில் மொத்த வசூலில் பாஜவுக்கு மட்டும் ரூ.3,077 ேகாடி கிடைத்துள்ளது. இந்த கேடு கெட்ட ஆட்சியை தூக்கி எறிவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு