லாரி உரிமையாளர்கள் 6ம் தேதி முதல் ஸ்டிரைக்

சென்னை: சென்னை சுற்றுவட்டார மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் ராயபுரத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். பின்னர், அவர்கள் கூறியதாவது:
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்ள ஆன்லைன் வழக்குகளால் பாதிக்கப்படுகிறோம்.அரசு இதனை கவனத்தில் கொண்டு ரத்து செய்ய வேண்டும். மேலும் சாலை வரியை 40 சதவீதம் வரை அரசு உயர்த்தி உள்ளது. இதனை நீக்க வேண்டும்.

வண்டலூர், மீஞ்சூர், எண்ணூர் போன்ற பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கூடிய வசதி இல்லை. தமிழக அரசு இதற்கென ஓர் பார்க்கிங் இடத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். வாகன ஓட்டுநர்கள் காவலர்களாலும், சமூக விரோதிகளாலூம் தாக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் சுங்கச்சாவடிகளை வைத்துக்கொண்டு லாரி உரிமையாளர்களை நஷ்டப்பட வைப்பதை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு ஜிஎஸ்டிக்குள் டீசலை கொண்டுவர வேண்டும்.

வரும் 6ம் தேதி முதல் லாரிகள், கனரக வாகனங்கள், பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் என அனைத்து விதமான லாரிகளையும் இயக்க போவதில்லை. இதனால் ஒரு லட்சம் லாரிகள் ஓடாது. பால், மருந்து உணவு பொருட்களை மட்டும் அனுமதிப்போம். அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கிக்கொள்வோம். வரும் 6ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு