தந்தைக்கு உபதேசித்த சத்குருநாதன்

சுவாமிமலை

ஆலய வழிபாட்டினைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு முறை அற்புதமாகச் சொன்னார். ஆலயங்களில் கூட்டு வழிபாட்டில் ஈடுபடவேண்டும். ஒரு தனி இழையை எளிதில் அறுத்து விடலாம். பல இழைகளை ஒன்று சேர்த்து திரித்த கயிறு தேரைக் கூட இழுத்துவிடும் அல்லவா! பல அன்பர்கள் ஒன்றுசேர்ந்து ஏதாவது ஒரு கோயிலில் உட்கார்ந்து கூட்டு வழிபாடு செய்யலாம். இறைவனை அந்த வழிபாடு எளிதில் ஈர்த்துவிடும். பல குடும்பத்தினர் வாரத்துக்கு ஒரு முறையாவது ஒன்றுசேர்ந்து வழிபடுவது என்று வைத்துக்கொண்டால் அது சமூகத்தில் ஒற்றுமையையும்
நல்லுணர்வையும் ஏற்படுத்தும்.’’

1. ஆறுபடை வீடுகளில் சுவாமிமலை

வாரியாரின் இந்த அற்புதமான சிந்தனையோடு சுவாமிமலை வாசலில் இறங்குகிறோம். முருகனின் ஆறுபடை வீடுகளில் சுவாமிமலை மிக முக்கியமான தலம். ஆறு படை என்பது முருகப்பெருமானின் ஆறு முக்கியமான தலங்களைக் குறிக்கிறதா அல்லது முருகனின் பிரத்தியேகமான சில தத்துவங்களைக் குறிக்கிறதா என்கிற சர்ச்சை இருக்கிறது. புலவர் கீரன் அவர்கள் ஒரு முறை விளக்கம் சொல்லும்பொழுது முருகனிடத்திலே ஆற்றுப்படுத்தி நம்மை வழி நடத்தி அவனோடு சேர்க்கின்ற தலங்கள்தான் ஆறுபடை வீடுகள்.

ஆறுபடை வீடுகள் என்பது ஆறு என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்த தலங்கள் அல்ல என்றார். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையை இதற்கு மேற்கோளாகச் சொன்னார். அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடு மிகுந்த இந்த சர்ச்சையை விடுவோம்.சுவாமிமலையில் இறங்குவோம். காவேரிக் கரையில் உள்ள மிக முக்கியமான தலம்.

“நாடறியும் நூறு மலை
நாம் அறிவோம் சுவாமிமலை:’’
என்று சிந்திக்க வைக்கும் தலம்.

1. தகப்பன் சுவாமி

‘‘உனக்குத் தெரியுமா பிரணவத்தின் பொருள்?’’ என்று சிவன் கேட்க, ‘‘கேட்பது போல் கேட்டால் பதில் பெறலாம்’’ என்று முருகன் சொல்ல, குருவாய் முருகன் அமர்ந்து, தந்தைக்கு உபதேசம் செய்து, தகப்பன் சுவாமி என்று பெயர் எடுத்த தலம் இது. இதை திருவேரகம் என்றும் சொல்வதுண்டு. ஒரு அற்புதமான பாடல் உண்டு. அந்த பாடல் இது. வேடிக்கையாக இருக்கும்.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால்
ஆவதென்ன
இங்கு ஆர் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடல் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே

இதென்ன, வெங்காயம் சுக்கு வெந்தயம் சீரகம் பெருங்காயம் என்று மளிகைக் கடை பட்டியலாக இருக்கிறதே என்று கருத வேண்டாம் இது சிலேடைப் பாடல். சிலேடைப் பாடல்கள் இரு பொருள் தரும். இப்பாடலின் ஆன்மிகப் பொருளை மட்டும் இங்கு பார்ப்போம்.1. வெங்காயம் – வெறும் காயம் – வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்.

2. சுக்கானால் காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).3. வெந்தயத்தால் ஆவதென்ன உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.
4. இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்? இறந்துவிட்டால் ஏன் எடுக்கவில்லை, நாழியாகிறது, என்பார்களே தவிர, பாவம் எத்தனையோ காலம் நம்மோடு இருந்தவர் இன்னும் பத்துநாள்கள் நம்மோடு இருக்கட்டும் என்று சடலத்தை வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

5. மங்காத சீரகத்தை தந்தீரேல் – சீரகம் – சீரான அகம் – அலைபாயாத மனம் – சஞ்சலமற்ற அறிவு – நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்…

6. வேண்டேன் பெருங்காயம் – பெரும்/பெருமைக்குரிய உடல். மனிதப் பிறவியே கிடைத்தற் கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும். ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம். (இங்குதான் பேயாரின் (காரைக்கால் அம்மையார்) அறிவுத்திறனை நாம் பாராட்ட வேண்டும். பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும் என்று கேட்டுவிட்டார்!

7. வேரகத்து செட்டியாரே – வேரகம் – திருவேரகம் – சுவாமிமலை. செட்டியார் – (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமிமலை முருகப்பெருமாள் பெருமான். காசுக்கேற்ற சரக்கு.செய்த வினாக்களுக்கு ஏற்ற பிறவி உலக வாழ்க்கையை வியாபாரம் என்பார்கள்.

செய்பவர் இறைவன்(முருகன்) எனவே தொழில் முறையில் வணிகர்.(செட்டியார் )இந்த உடம்பினை மருந்து மாத்திரைகளால் கவனித்து என்ன பயன்? ஏரகத்துச் செட்டியாரே, சுவாமிநாதப் பெருமானே, பெருங்காயமான இந்த உடம்பைச் சுமக்கும் பிறவியை எடுப்பேனா? என்று புலவர் நயமாகக் கேட்கின்ற அற்புதமான பாடல் இது.முருகனுக்கு சுவாமிநாதன் சிவகுருநாதன் என்கிற திருநாமம். நல்ல வசதியான தலம். அருகிலேயே கும்பகோணம் என்கின்ற பெரிய ஊர் உண்டு. தங்குவதற்கு நல்ல இடங்கள் உண்டு.

2. முருகனுக்கு அறுபது படிகள்

சுவாமிமலை என்பதால் இங்கே மலையைத் தேடக்கூடாது. கட்டுமலை போல கீழ் மேல் என்று இரண்டு பகுதியாக திருக்கோயில் விளங்கும். கோயிலில் மூன்று கோபுரங்கள் (வாசல் கோபுரங்கள்) மற்றும் மூன்று பிராகாரங்கள் உள்ளன. மூன்று பிராகாரங்களில், ஒன்று அடித்தளத்திலும், இரண்டாவது மலையின் உச்சிக்கு நடுவிலும், மூன்றாவது மலையின் மீதும், சுவாமிநாதசுவாமி சந்நதியைச் சுற்றி அமைந்துள்ளது.

சிவபெருமானுக்கு சந்நதி கீழே இருக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தோடு காட்சி அளிக்கிறார். மேலே குருநாதன் முருகனுக்கு சந்நதி இருக்கிறது. கீழே நல்ல அகலமான பிராகாரம். அலுவலகம் பிரார்த் தனைக்கான சகல வசதிகளும் இருக்கிறது.படியேறி முருகனைத் தரிசிக்க மேலே ஏற வேண்டும். நல்ல அகலமான படிகள். தமிழ் வருடங்கள் 60. தமிழ்க் கடவுளான முருகனுக்கு அறுபது படிகள்.

மேலே உள்ள பிராகாரத்தில், தல வரலாறு விளக்கும் (தந்தைக்கு மகன் பிரணவம் உபதேசிக்கும்) காட்சியைக் காணலாம். பெரிய ஓம் எழுதியிருக்கும்.ஓம் என்பது பிரணவம். ஓம் என்ற சொல் தமிழன் ரத்தத்திலே ஊறிய சொல். ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் என்பார் பாரதி. இலங்கையில் ஆம் என்று சொல்வதில்லை. ஓம் என்றே சொல்கின்றனர்.

மூச்சுக்காற்றை சுத்தமாக்கி உள்ளொளியில் இருந்து பிறக்கும் சொல் ஓம். நாதவிந்துவாய் ஒலிக்கும் சொல். சகல சாத்திரப் பொருட்களையும் உள்ளடக்கிய சொல். அந்த உயர்வான பிரணவத்தின் உட்பொருளைச் சொன்ன தத்துவ சுவாமி அல்லவா முருகன். இந்தச் சிந்தனையோடு பிராகாரத்தை வலம் வருவோம். பிராகாரத்தில் நாரதர், மகாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், வீரபாகுதேவர் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன.

3. கண் பொருத்த விநாயகர்

இங்குள்ள விநாயகருக்கு கண் பொருத்த விநாயகர் என்று பெயர். கண்பார்வை குறை உடையவர்கள் இந்த விநாயகரை வேண்டிக்கொண்டு பார்வை பெறுகிறார்கள். சுவாமி
மலைக்கு அருகிலேயே சற்று தூரத்தில் இன்னொரு பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உண்டு. அது திருவலஞ்சுழி. இங்கு காவிரி ஆறு வலமிருந்து இடமாக சுழித்துக்கொண்டு திரும்புவதால் திருவலம் சுழி என்றும் இங்குள்ள பிள்ளையாருக்கு திருவலம் சுழி விநாயகர் என்றும் பெயர் வந்தது.

இவரை தரிசித்துவிட்டே சுவாமிமலைக்கு தரிசனம் செய்ய வேண்டும் என்கிற மரபும் உண்டு. இந்த விநாயகர் வெண்மையான நிறம் படைத்தவர். மிகச் சிறிய உருவம். நுரைப் பிள்ளையார் என்றும் சொல்கிறார்கள். கடல் நுரையினால் ஆனவர். வெள்ளைப் பிள்ளையார் என்றும் அழைக்கிறார்கள். அமிர்தம் பெற்ற இந்திரன் இங்கே வந்து பிள்ளையாரை வழிபட்டானாம். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் விநாயகரை வழிபட இந்திரன் இங்கே வந்து செல்வதாக ஐதீகம். ஆகையினால் வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகப் பிரம்மாண்டமாகக்
கொண்டாடப்படுகிறது.

4. நேத்திர புஷ்கரணி

இரண்டு பிள்ளையாரையும் நினைத்துக்கொண்டு உள்ளே செல்லலாம். சுவாமிநாத பெருமானின் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. சந்நதிக்கு முன்னால் மகா மண்டபத்தில் யானை நின்று கொண் டிருக்கிறது. இதற்குக் காரணம் அரிகேசன் என்று ஒரு அரசன். அவன் இந்திரனுக்கு ஏகப்பட்ட தொல்லைகளைச் செய்துவந்தான். இந்திரன் ஆற்றல் இழந்து தவித்தான். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபொழுது இந்த தலத்திற்கு வந்து பிரார்த்தித்தான். சுவாமிநாதப் பெருமாள் அவனுக்கு அனுக்கிரகம் செய்தார். புதிய வலிமையை அவனுக்குக் கொடுத்தார்.

அந்த வலிமையால் இந்திரன் அசுரனை அழித்தான்.அந்த மகிழ்ச்சியில் முருகனுக்குத் தொண்டு செய்ய தன்னுடைய யானையான ஐராவதம் எனப்படும் வெள்ளை யானையை நிறுத்தினான். இங்கிருந்து தொண்டு செய்யும்படி கட்டளையிட்டான். அந்த ஐராவதம் தான் இந்த யானை. கருவறையில் சுவாமிநாத பெருமாள் கம்பீரமாக நெடிது வளர்ந்து ஓங்கிய உருவம். வலது திருக்கரம் திருத்தண்டம் பற்றி நிற்க, இடது திருக்கரம் தொடையில் படிந்து இருக்கிறது. பெருமானின் கருணை முகமும் சுடர்விடும் திருக்கண்களும் அழகிய அதரமும் கற்பூரஜோதியிலே பரவசப்படுத்தும்.

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விசேஷ அலங்காரம். சில முக்கியமான நேரங்களில் வைரவேல் சாற்றிக்கொண்டும் காட்சி தருவதுண்டு. வியாழக்கிழமைகளில் தங்க கவசம் சாற்றுகிறார்கள். சுவாமிநாத சுவாமியின் திருக்கை வேலினால் உண்டாக்கிய தீர்த்தம் கீழ வீதியில் உள்ளது. இதற்கு நேத்திர புஷ்கரணி என்று பெயர். இந்த புஷ்கரணியில் நீராடி பிள்ளையாரையும் முருகனையும் தரிசித்தால் அகப்பார்வையும் புறப்பார்வையும் கூர்மைப்படும்.

5. அருணகிரிநாதரின் திருப்புகழ்

அருணகிரிநாதரின் அற்புதத் திருப்புகழ் ஒன்று.
காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே
ஓமெழுத் திலன்பு மிகவூறி
ஓவியத் திலந்த மருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

பிரணவம் சொன்ன பெருமான் அல்லவா, அதனால் ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி என்கிறார். திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே, பொன் மயிலில் ஏறும் வீரனே, சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே, ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு மெலிந்து போகாமல், யம தூதர்களின் கைகளில் சிக்கி இறந்து போகாமல், ஓம் என்னும் பிரணவப் பொருளில் மிகவும் ஈடுபட்டு, சித்திரம் போன்ற மோன நிலை முடிய அருள்வாயாக என்பது இந்தப் பாடலின் கருத்து.

ஆனால் முருகனை நினைக்க முடிகிறதா? மணிக்கணக்கான இந்த இயந்திர யுகத்தில் இறைவனை எண்ணி வணங்க முடிவதில்லையே. மணிக்கணக்கில் வேண்டாம். அட, அரை நிமிஷமாவது மனது அவன் திருவடியில் ஒன்றி நிற்கிறதா? சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத தன் இயலாமையை ஏரக முருகனிடம் சொல்லுகின்றார் அருணகிரிநாதர்.

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி
வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே
செச்சை
கமழுமண மார்க டப்ப …… மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு
நீள்சவுக்ய
சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு
நீகொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் …… முருகோனே.

அவனை வணங்க அவன் உதவி வேண்டும் அந்த உதவியை இந்த முருகனிடம் மனம் உருகிக் கேட்கிறார் அருணகிரிநாதர். சகல செல்வயோக மிக்க பெருவாழ்வு, நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்து உதவி புரிய வேண்டுகிறார்.குமரகுருபரா, முருகா சரவணா என்று வரிசையாக அவனைப் பெயர் சொல்லி அழைத்து, நமனை அன்று வென்றெடுத்த சிவனை சீடராகக் கொண்டவனே, என்னையும் ஏற்க வேண்டும் என்று முறையிடுகிறார்.

முருகனை தரிசிக்கும்போது அருணகிரிநாதரின் திருப்புகழ்கள் வரிசையாக மனதில் வலம் வரும். பிராகார வலத்தோடு இந்த மானசீக வலத்தையும் சேர்த்தே செய்வோமே….

1. கும்பகோணத்தில் உள்ள சப்த ஸ்தான கோயில்களில் இதுவும் ஒன்று.

2. முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.பேருந்து வசதிகள் உண்டு.

3. மூலவர்: சுவாமிநாதர், சுப்பையா
தாயார்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: நெல்லிமரம்
தீர்த்தம்: வஜ்ர தீர்த்தம், குமாரதாரை தீர்த்தம், சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம்.

4. முருகன் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப் பெற்ற வஜ்ரவேலுடன் காணப்படுகிறார். கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமி நாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ரநாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது.

5. அறுபது வருடங்களை குறிக்கும் 60 படிகள் உள்ள கட்டுமலை சுவாமிமலை. தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாட்களில் இந்த படிகளுக்கு வஸ்திரம் சாற்றி, தேங்காய், பழம் வைத்து பாடல் பாடி பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு திருப்படி பூஜை என்று பெயர்.

6. விழாக்கள்

திருக்கார்த்திகை திருவிழா -10 நாட்கள்
இத்திருவிழாவே இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.
சித்திரை -பிரம்மோற்சவம் -10 நாட்கள்

வைகாசி -வைகாசி விசாகப்பெருவிழா
ஆவணி -பவித்ரோற்சவம் -10 நாட்கள்
புரட்டாசி நவராத்திரிபெருவிழா-10 நாட்கள்

ஐப்பசி-கந்தசஷ்டிபெருவிழா-10 நாட்கள்
மார்கழி-திருவாதிரைத் திருநாள்-10 நாட்கள்
தை -பூசப்பெருவிழா
பங்குனி -வள்ளி திருக்கல்யாண விழா

இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடிஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும்.

7. நேர்த்திக்கடன்:

மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனக் காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திக் கடன்களாக உள்ளது.

8. கோவில் திறந்திருக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முனைவர் ராம்

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்