உன்னத வாழ்வுதரும் உழவாரப்பணி வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உழவாரப்பணி இது நோக்கம் என்ன தெரியுமா? இறைவன் இருக்கும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் அப்படி வைத்துக் கொள்வது நம் கடமை. உழவாரப்பணியை பல தரப்பாக பிரித்து செய்யப்படுகிறது. உழவாரப்பணி செய்தால் உன்னத வாழ்வு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சிலர், தெய்வத்திற்குச் செய்யும் தொண்டாக கோயிலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்கின்றனர். உழவாரப் பணியின் கீழ் என்னென்ன வேலைகள் எல்லாம் வருகின்றன என்று பார்க்கலாம்.

அடியார்கள் பலரும் அறிந்த விஷயம்தான், உழவாரப்பணி. ஒரு சிலர் உழவாரப் பணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அது எப்படி நடைபெறும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். பழங்காலத்தில் ஆலயங்களில் கிடைத்த நைவேத்தியம் மற்றும் சிறு வருமானத்தைப் பெற்றுக்கொண்ட சிலர், தெய்வத்திற்குச் செய்யும் தொண்டாக கோயிலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்துவந்தனர். ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப்பணியைவிட சிறந்த புண்ணியம் தரும் செயல் வேறு இல்லை. தான் வாழ்ந்த காலம் முழுவதும், தள்ளாத வயதிலும்கூட உழவாரப் பணியை செய்தே சிவபெருமானின் பேரருளைப் பெற்றவர், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர்.

கோயிலில், புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவதே உழவாரப் பணியின் முதல் நோக்கம். இதைச் செய்ய, தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவியை பயன்படுத்துவார்கள். அதற்கு ‘உழவாரப் படை’ என்று பெயர். அந்த உழவாரப் படையை தன்னுடைய கையில் தாங்கியபடி காட்சி தருபவர், திருநாவுக்கரசர். எப்போதும் உழவாரப் பணி மூலம் ஆலயத்தை தூய்மை செய்தபடி, பாடல்களைப் பாடுவது இவரது பணி.சரி… இந்த உழவாரப் பணியின் கீழ் என்னென்ன வேலைகள் எல்லாம் வருகின்றன என்பதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன், நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், தங்கள் கையில் இருக்கும் குப்பைகளை ஆலயத்தில் போடுவதை தவிர்க்க வேண்டும். ஆலயத்தை குப்பையாக்கும் பக்தர்களின் இல்லத்தில் துன்பம் என்னும் குப்பை எப்படி நீங்கும்? இதுபோன்று ஆலயங்களில் சேரும் குப்பைகளை அகற்றுவது உழவாரப் பணியின் ஒரு பகுதி. ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, இறைவனின் பிரசாதமாக வழங்கப்படுவது திருநீறு. அதை சிலர் ‘இறைவனின் அருள் வேண்டாம்’ என்பது போல, ஆலயத்தில் ஆங்காங்கே இருக்கும் தூண்களில் கொட்டி விட்டுச் சென்று விடுவார்கள். அப்படி கொட்டப்பட்ட திருநீறு, குங்குமங்களை அகற்றி, தூண்கள், பிரகாரங்களை சுத்தம் செய்வதும் இந்தப் பணியின் ஒரு பகுதி.

இறைவனுக்கு சூட்டப்பட்ட மலர்களை நந்தவனத்தில் போடுவது, திருக்கோயில்களில் சேர்ந்திருக்கும் ஒட்டடைகள், அழுக்குகளை அகற்றுவது, இறைவனின் ஆடைகளை துவைப்பது, அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது, நந்தவனத்தை சுத்தம் செய்வது, ஆலயத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவது, கோபுரங்களில் முளைத்திருக்கும் சிறிய செடி, கொடிகளை அகற்றுவது, சிவாச்சாரிகளின் அனுமதி பெற்று ஆலய கொடிமரம் மற்றும் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு சுத்தப்படுத்துவது போன்ற பணிகளும் இதில் அடக்கம்.

தவிர, கல் திருமேனிகளுக்கு மாவு, தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது, ஆலயங்களில் எரியாத மின் விளக்குகளை சரி செய்வது, ஆலயத்தை வாரம் ஒருமுறை பசுஞ்சாணம் இட்டு மெழுகுவது, கோயிலைச் சுற்றி தினமும் கோலமிடுவது, ஆலயத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு, கற்பூர தீபத்தால் படிந்த கரும்புகை நீக்குவது, கோயில் சுற்றுச்சுவர், மதில் சுவர்களை சுத்தம் செய்து, அதற்கு வெள்ளை அடிப்பது போன்றவை அனைத்தும் உழவாரப் பணிகளே ஆகும்.இவற்றைச் செய்வதால் இறைவனின் அருளோடு, நமது மனமும், உடலும் உறுதியாகும். நமக்கு உன்னத வாழ்வும் கிடைக்கும். நம்மால் இயன்ற அளவுக்கு விடுமுறை தினங்களில் கோயிலுக்கு சென்று உழவாரப்பணி மேற்கொள்வோம்.

தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்

Related posts

மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்

தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்