லண்டன் போன மலைக்கு தெரியாம இலையுடன் கூட்டணிக்கு காய் நகர்த்தும் தாமரை சீனியர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தங்களை டம்மியாவே வச்சிக்கிறதா சீனியர்கள் நினைப்பதால தான் பூட்டு மாவட்ட இலைக்கட்சி செயல்பாடுகளில் வேகமில்லைன்னு பேச்சாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்ட இலைக்கட்சியினர் ரொம்ப சோர்வா இருக்காங்களாம்.. மாஜி மந்திரிகளான உளறல்காரரும், ஷாக்கடிக்கும் துறையை கவனித்தவரும் தற்போது மாவட்ட முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் அந்த பொறுப்பில்தான் இருக்கின்றனரா என சந்தேகம் உள்ளதாக இலைக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அந்தளவுக்கு மாவட்டத்தில் இருவரின் செயல்பாடுகள் நத்தையை விட மிக மந்தமாக இருக்கிறதாக நிர்வாகிகள் பேசிக்கிறாங்க… பாரின் பறக்கும் முன் மலராத கட்சியின் மாநில தலைவர், சேலத்துக்காரரை கடுமையாக விமர்சித்து பேசியதற்கு பல மாஜிக்கள், நிர்வாகிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.  ஒருமையில் கூட பேசி ஆத்திரப்பட்டாங்க.. ஆனால், பூட்டு மாவட்டத்துல இருக்கும் இந்த 2 மாஜிக்களும் அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லையாம்.. தர்மயுத்தத்துக்காரரோட ஊர்ல இருந்து கூட எதிர்ப்பு வந்திருக்கு…

ஆனால், பூட்டு மாவட்டத்துல 2 பேரும் இதுவரை வாய் திறக்காம கப்சிப்னு இருக்காங்க… இதுகுறித்து விசாரித்தபோது, இலைக்கட்சிக்கு அடித்தளமே பூட்டு மாவட்டம்தான். ஆனால், கட்சியில் சீனியர்களான தங்களை விட, பின்னால் வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தர்றாங்க… தங்களை டம்மியாகவே வச்சிருப்பதாக இருவரும் நினைக்கிறாங்களாம்… இதனால் செயல்பாடுகளில் வேகமில்லைனு பேச்சு ஓடுகிறது.. மறுபுறம் எதற்கு வம்பு…? ஏதாவது பேசிட்டு நாளைக்கு யார் கோர்ட், கேஸ்னு அலையுறது என்ற எண்ணமும் காரணம்னு பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லேப்டாப்பில் உதவிபொறியாளர் பதுக்கி வைத்த கணக்கில் வராத பணத்தால ‘பொறி’யில் சிக்கப் போறாங்களாமே ரெண்டு பெண் அதிகாரிகள்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ஒருவரை கடந்த ரெண்டு தினங்களுக்கு முன்னால லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்திலேயே சுற்றிவளைத்துவிட்டாங்களாம்.. லேப்டாப் பையில் பதுக்கி வைச்சிருந்த ரூ.1.2 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்திருக்காங்க..

இது, கணக்கில் வராத பணம்னு சொல்றாங்க… இந்த பணத்தை, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் 3 பேரிடமிருந்து லஞ்சமாக பெற்றிருக்காரு… இவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தபோது, ‘இந்த பணம் எனக்கு சொந்தமானது அல்ல, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உதவி கமிஷனர் நிலையில் பணிபுரியும் இரு பெண் அதிகாரிகளுக்கு சொந்தமானது. அவர்களிடம் கொடுக்கச் சொல்லி ஒப்பந்ததாரர்கள் சிலர் என்னிடம் கொடுத்துட்டு போனாங்க..’னு சொல்லியிருக்கிறாரு.. இதையடுத்து, அந்த இரு பெண் அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்திருக்காங்களாம்..

அவங்க ரெண்டு பேருமே கரன்சி குவிப்பதில் வல்லவர்களாம்.. அவர்களும் விரைவில் விஜிலென்ஸ் பிடியில் சிக்குவார்கள்னு பரவலாக பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘லீடரு வெளிநாட்டுக்குப் போனதை பயன்படுத்தி இலைக்கட்சியுடன் கூட்டணிக்கு காய் நகர்த்துறாங்களாமே தாமரையின் சீனியர்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை பார்ட்டியின் மவுன்டன் லீடரு வெளிநாட்டுக்கு படிக்க போன பிறகு மூத்த தலைகள் எல்லாம் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்..

ஆர்கனைசராக இருக்கும் லீடரு, மாஜி மினிஸ்டரான மூத்த தலைவரு, ஸ்டேட் அசிஸ்டென்ட் லீடரு என்று அனைவரும் மணிக்கணக்கில் மீடியாக்களிடம் பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்.. அதில் முடிந்தவரை எந்த கட்சியையும் அட்டாக் பண்ணக்கூடாது என்பதில் கவனமா இருக்காங்களாம்.. இப்படித்தான் சேலத்துக்காரரின் சொந்த ஊருக்கு தென்மாவட்டத்தை சேர்ந்த மூத்த தலைவரு வந்தாராம்.. அப்போது அவரிடம் இலைகட்சி தலைவரு, உங்க கட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்றாரேனு ஒரு கேள்வியை போட்டாங்களாம்..

அப்போது சுதாரித்துக் கொண்டவரு, கூட்டணி என்பதை எப்போதும் கட்டி வைக்க முடியாது. ஆனால் எங்களுக்கு பகையாளி என்று யாருமே கிடையாதுனு நழுவினாராம்.. இதுவும் ஒருவகையில் சேலத்துக்காரருக்கு மறைமுகமாக மூத்த தலைவரு விடுக்கும் அழைப்புதானாம்.. வெளிநாடு போன லீடரு, திரும்பி வருவதற்குள் சேலத்துக்காரரை எப்படியாவது கூட்டணியில் இணைப்பதற்கான எய்மில் சீனியர் பார்ட்டிகள் இருப்பதும் இதற்கொரு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்த தாமரை நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லாட்ஜ் மேட்டர் ஒண்ணு ரொம்ப ஹாட்டாக போயிக்கிட்டு இருக்கிறதா பேசிக்கிறாங்களே என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல இருக்குற குடியேற்றம் நகரமானது, தமிழக- ஆந்திர பார்டராக அமைந்திருக்குது.. அங்க நகரத்தையொட்டி தனியார் லாட்ஜ் கட்டியிருக்காங்க.. அந்த லாட்ஜ் குக்கர் கட்சி மாவட்ட நிர்வாகிக்கு சொந்தமானதாம்.. இங்க அடிக்கடி ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள்ல இருந்து இளம்பெண்களை அழைத்து வந்திருக்காங்க..

லாட்ஜ்ல தங்குவதற்காக யாரோ கஸ்டமர் வந்து போறாங்கன்னு பார்த்தா, அவங்க வேற மாதிரி கஸ்டமராம்.. அதாவது அழகிகளை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்காங்க.. இந்த தகவல் மாவட்ட உயர் காக்கி காதுக்கு போயிருக்குது.. உடனே நகர காக்கிகள் ரெய்டு நடத்துனாங்க.. இதுல இளம்பெண்கள், மேனேஜர்னு 15 பேர் சிக்குனாங்க.. இதனால, குக்கர் கட்சிக்காரருக்கு இது தெரியாம நடந்ததா, தெரிஞ்சே நடந்ததான்னு விசாரணை போய்கிட்டிருக்குதாம்.. இந்த லாட்ஜ் மேட்டர்தான் ரொம்ப ஹாட்டாக போயிக்கிட்டிருக்குதாம் குடியேற்றம் நகரத்துல..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!!

இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது

குருப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி