லண்டன் போனவர் மேல ஒருங்கிணைப்பு குழு தலைவர் காண்டாகி இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மன்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற தேனிக்காரரை வரவேற்காமல் மாவட்ட செயலாளர் புறக்கணித்துட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த மன்னர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேனிக்காரர் சென்று இருந்தார். அப்போது மாஜி நகர்மன்ற தலைவர், நிர்வாகிகளுடன் ஆஜராகி தேனிக்காரரை வரவேற்று அழைத்து சென்றாராம்.. ஆனால் மாஜி எம்எல்ஏ தேனிக்காரரை வரவேற்க வரவில்லையாம்…. அப்போது நாசுக்காக தேனிக்காரர், எங்க இன்னொரு மாவட்டம் என்று நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார்.

அப்போது நிர்வாகிகள், என்ன சொல்வது என்று தெரியாமல் நெளிந்திருக்காங்க.. இதனால் மாஜி எம்எல்ஏ மீது தேனிக்காரர் கடும் அதிருப்தியில் சென்றாராம்.. இலை கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவட்டத்துக்கு வரும்போது அவரை வரவேற்க மாவட்ட பொறுப்பில் இருக்க கூடிய மாஜி எம்எல்ஏ புறக்கணித்தால் தேனிக்காரர் கூறியபடி இலைகட்சியில் அனைவரையும் எப்படி ஒருங்கிணைக்க போறார்களோனு தெரிய வில்லையே என 2வது கட்ட நிர்வாகிகளுக்குள் முணுமுணுத்தபடி சென்றார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓட்டல் ஓனர் மன்னிப்பு வீடியோ விவகாரத்தால் லண்டன் போனவர் மீது ஒருங்கிணைப்பு குழு கடும் கோபத்தில் இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாஜி போலீஸ் அதிகாரியான மலராத கட்சியின் மாநில தலைவரு, அரசியல் பாடம் படிக்க லண்டன் போயிருக்காரு.. அங்கிருந்தே கட்சியை வழிநடத்துவேன்னு கூறிய நிலையிலும், டெல்லி தலைமை கட்சியை பராமரிக்கும் வகையில், ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைச்சது.. அதன் தலைவரும் வானத்தை வில்லாக வளைப்பேன், எனக்கு தெரியாமல் அணுகூட அசையக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்காராம்..

இந்நிலையில், தான், லண்டனில் இருந்து மாஜி போலீஸ் அதிகாரி, மன்னிப்பு கோரி டிவிட் ஒன்றை தட்டி விட்டிருக்காரு.. கோவையில் ஜிஎஸ்டி குளறுபடி தொடர்பாக நடந்த கூட்டத்துல, ஓட்டல் அதிபர் ஒருவர், ஒன்றிய நிதி மந்திரியை வச்சிக்கிட்டு கேட்ட கேள்வி, நாடு முழுவதும் வைரலாச்சு.. இதனால ரொம்பவே கோபமடைஞ்ச அவர், எம்எல்ஏவை வைத்து, அவரை மன்னிப்பு கேட்க வச்சாராம்.. அந்த ஓட்டல் ஓனர், எழுந்து நின்று மன்னிப்பு கேட்கும் வீடியோவை, தாமரை பார்ட்டிகள் வெளியிட்டாங்க.. இந்த விவகாரம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைச்சது..

தன்னை லண்டனுக்கு அனுப்பிட்டு, கட்சியை நடத்த குழுவா போடுறீங்கனு கோபத்தில் இருந்த மாஜி போலீஸ்காரர், இந்த விவகாரத்தை ஆயுதமா கையில் எடுத்துக்கிட்டு, அதே வேகத்தோட ஓட்டல் ஓனரிடம் மன்னிப்பு கேட்டு, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டாரு.. இதனால ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரொம்பவே அப்செட் ஆகிட்டாராம்.. பொறுப்பெல்லாம் என்னிடம் இருக்கும் பட்சத்தில், அவர் ஏன் உள்ளே வந்து மன்னிப்பு கேட்கணுமுன்னு கடும் கோபத்தில் இருக்காராம்..

ஆனால், இந்த விவகாரத்தில் மாஜி போலீஸ்கார் ஸ்கோர் பண்ணிட்டார்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.. கோவை பெண் எம்எல்ஏவுக்கு, டெல்லியில் ஆதரவு இருக்காம்.. கடந்த தேர்தலில் இலைக்கட்சியோட கூட்டணி வைச்சே ஆகணுமுன்னு அவர் சொல்லியிருக்காரு.. இது மாஜி போலீஸ்காரருக்கு பிடிக்கலையாம்.. சரியான நேரத்திற்காக காத்திருந்த அவருக்கு, ஓட்டல் ஓனரின் மன்னிப்பு வீடியோ கைகொடுத்ததாம்.. இதனால பெண் எம்எல்ஏவும் அதிர்ச்சியில இருக்காராம்..

மன்னிப்பு வீடியோ வெளியானதிலும் மர்மம் நிறைந்திருப்பதாக கட்சியின் ஒருதரப்பினர் சொல்றாங்க.. அதே நேரத்தில், எவ்வளவு தான் ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்டாலும், இனிமேல் இந்த கட்சியை சீண்டவே கூடாதுங்குற முடிவுக்கு ஓட்டல் அதிபர்கள் வந்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எனக்கு எப்ப தோணுதோ அப்போ தான் டெண்டர்ன்னு அடம்பிடிக்கும் அதிகாரியால எந்த திட்டப்பணியும் தொடங்க முடியாம கவுன்சிலருங்க தவிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குயின் பேட்டை மாவட்டத்துல லி என்று முடியுற ஒன்றியத்துல பெயரில் வெளிச்சத்தை கொண்ட அதிகாரி இருக்குறாரு.. இந்த ஒன்றியத்துல 47 கிராம ஊர் ஆட்சி இருக்குது.. இதுல சாலை பணிகள், குடிநீர், கால்வாய் பணிகள், கட்டிடப்பணிகள்னு பல திட்டப்பணிகள் செயல்படுத்தணும்.. ஆனா அந்த ஒன்றியத்துல இருக்குற வெளிச்சமான அதிகாரி புதுசா எந்த திட்டப் பணிகள் செய்றதுக்கும் டெண்டர் வைக்குறதில்லையாம்.. கவுன்சிலர்கள் கேட்டா, எனக்கு எப்ப தோணுதோ அப்போ தான் வைக்க முடியும், நீங்கள் வேண்டும்னா எனக்கு டிரான்ஸ்பர் போட்டு மாத்துங்கணு சொல்றாராம்..

அதுமட்டுமில்ல ஒன்றியத்துல அடிப்படை வசதி இல்லையாம்.. அதுக்கு கேட்டாலும், ‘ஐயா சாமி, நன்றி’ வரட்டுமான்னு சொல்லிட்டு போறாராம்.. இதனால லி ஒன்றியத்துல பல பணிகள் கிடப்பில் கிடக்குதாம்.. ஏற்கனவே செய்த திட்டப்பணிகளுக்கும் பில் பாஸ் செய்யாம இழுத்தடிக்குறாராம்.. இதனால மாவட்ட உயர் அதிகாரிகள் லி ஒன்றியத்துல ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தி, கிடப்பில் போட்ட பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்குது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாயமான வெள்ளித்தட்டின் மகத்துவம் தெரிந்ததும் ஆடிப்போனாராமே புல்லட்சாமி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் அரசியல் செல்வாக்குமிக்க புல்லட்சாமியை சுற்றி எப்போதும் ஒருகூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கும்.. வீடு, கட்சி அலுவலகத்தை தொடர்ந்து சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தையும் கும்பல் விட்டுவைக்காத நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, புதுப்புது முகங்களும் சமீபகாலமாக அங்கு நுழைந்த வண்ணம் இருக்காங்களாம்..

சுபநிகழ்வுகள், அரசியல் விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுக்க சால்வை, பழத்தட்டுகள், நட்ஸ் புரூட்ஸ் உள்ளிட்ட தாம்பூல தட்டுகளுடன் சட்டசபையில் தினசரி புல்லட்சாமியை சந்திக்க விஐபிக்கள் வருவது வழக்கம்.. அதை கையில்கூட வாங்காத புல்லட்சாமி, பத்திரிகையை மட்டுமே எடுத்து பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இருப்பினும் அருகில் அவரை சுற்றியுள்ள கூட்டமோ அடுத்த நிமிடத்தில் பழத் தட்டினை பறித்து விடுமாம்..

இவ்வாறாக ஒரு நாளைக்கு சராசரி 20 முதல் 20 கிலோ வரையிலான பழ வகைகளை சுருட்டி ருசிபார்த்த கும்பலில், சிலர் புதுவரவாக நுழைந்துள்ளார்களாம்.. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர், தனது செல்வாக்கை காட்டும் வகையில் வெள்ளித்தட்டில் பழ வகைகளுடன் பத்திரிகை வைப்பதற்கு வந்தாராம்.. பத்திரிகையை புல்லட்சாமி எடுத்த அடுத்த நொடியில், வெள்ளித் தட்டை வாங்கிய புதுவரவில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டாராம்..

சில நிமிடங்களுக்குப் பின் அந்த தொழிலதிபர் வெள்ளித் தட்டின் மகத்துவம் குறித்து புல்லட்சாமியிடம் கூறவே, அதை பார்க்க எடுத்து வருமாறு அங்கிருந்தவர்களிடம் கூறினாராம்.. அவர்கள் சுற்றும் முற்றும் தேடி பார்த்துவிட்டு வெள்ளித்தட்டை காணோம்னு கூறவே ஆடிப்போய் விட்டாராம் புல்லட்சாமி. இதை தனது ஆதரவாளர்களிடம் புல்லட்சாமி, புலம்பிவிட்டாராம். பின்னர் டென்ஷன் ஆன புல்லட்சாமி, கேமராவை பார்த்து ஆசாமியை கண்டுபிடிங்கள் என்று காக்கிக்கு உத்தரவிட்டு மனதை தேற்றிக் கொண்டாராம். இதுதான் புதுச்சேரியின் தற்போதைய ஹைலெட்’’ என்கிறார் விக்கியானந்தா.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை