மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல்

டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்குதேசமும், ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு அளித்தால் மட்டுமே பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. 2 முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக சபாநாயகர் பதவியை விட்டுத்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை இருகட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது டிடிபி பாலயோகிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடு சுட்டிக் காட்டியுள்ளார். தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சியை தக்க வைக்க ஆதரவு கட்சிகளுக்கு துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் டிடிபி, ஐ.ஜ.தளம் நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுளளது.

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்