Thursday, June 27, 2024
Home » மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் கடுமையாக குறைந்துள்ளது: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு

மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் கடுமையாக குறைந்துள்ளது: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு

by Suresh

சென்னை: மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக குறைந்திருக்கிறது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடந்த மக்களவை தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டியிருக்கிறார்கள் என செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் இட்டுக்கட்டி பேசி சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நரேந்திர மோடி தொடுத்தார். அதேபோல, மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 2014 இல் வெற்றி பெற்ற 283 பேரிலும், 2019 இல் வெற்றி பெற்ற 303 பேரிலும், 2024 இல் வெற்றி பெற்ற 240 பேரிலும் ஒருவர் கூட சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிற செய்தியாகும்.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவமே இல்லாமல் ஆட்சி நடைபெற்றதால் நாடு முழுவதும் அவர்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களும், அவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளும், கொலைவெறித் தாக்குதல்களும் நடைபெற்றன. இந்திய மக்கள் தொகையில் 20 சதவிகிதம் இருக்கிற, அதாவது ஏறக்குறைய 25 கோடி சிறுபான்மையின மக்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமலேயே 10 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய நரேந்திர மோடி, மீண்டும் அவர் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கே தொடர்ந்து நீடிக்கிறது.

இது காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவின்படி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்கு எந்தவகையிலும் பெருமை சேர்க்கக் கூடியவை அல்ல. எந்த குடிமக்களையும் மத, சாதி, இன, மொழி அடிப்படையில் வேறுபடுத்தக் கூடாது என தெளிவாக அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு நேர் எதிராக நரேந்திர மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது அவரது மதவெறி அரசியலையே வெளிப்படுத்துகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக குறைந்திருக்கிறது. 18-வது மக்களவையில் 15 சதவிகித மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தினரில் 24 பேர் – அதாவது 4.4 சதவிகித பிரதிநிதித்துவம் தான் உள்ளது. 1990-க்கு பிறகு பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட ஆரம்பித்திலிருந்து இத்தகைய போக்கு ஆரம்பித்தது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 1980 முதல் 1990 வரை 8 சதவிகிதத்திற்கும் மேலாக இருந்தது. தற்போது 18-வது மக்களவையில் மொத்தமுள்ள 24 உறுப்பினர்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியிலும், 4 பேர் சமாஜ்வாடி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளிலும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். ஆனால், நரேந்திர மோடியின் பா.ஜ.க.விலோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளிலோ இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் இருப்பது மதச்சார்பற்ற கொள்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

அரசமைப்புச் சட்ட முகப்புரையில் உள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு நேர் எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செயல்பட ஆரம்பித்துள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயலில் இருந்து சிறுபான்மையின மக்களை காக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடந்த மக்களவை தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டியிருக்கிறார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதன் மூலம் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற்று விடலாம் என்கிற மோடியின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல நரேந்திர மோடி எழுப்பிய ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்திக்கு உட்பட்ட பைசாபாத் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றிருப்பது மதவெறி சக்திகளுக்கு விழுந்த மரண அடியாகும்.

அனைத்திற்கும் மேலாக பைசாபாத் தொகுதி தனித் தொகுதியல்ல. ஆனால், அங்கு போட்டியிட்ட அவதேஷ் பிரசாத் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் பொது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவு காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற பன்முகத்தன்மைக்கும், பட்டியலின மக்களுக்காக இந்தியா கூட்டணி என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பைசாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற தலித் வேட்பாளர் 5.5 லட்சம் வாக்குகள் பெற்றிருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த இமாலய வெற்றியாகும்.

இந்த வெற்றியின் அடிப்படையில் மிகுந்த நம்பிக்கையோடு அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பரப்புரையை மேற்கொண்ட தலைவர் ராகுல்காந்தியின் முயற்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே இதை நாம் கருத வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெற்ற 99 தொகுதிகளில் 31 இல் விளிம்பு நிலை மக்கள் (எஸ்.சி./எஸ்.டி. மக்கள்) வெற்றி பெற்றிருக்கிறார்கள். தற்போது காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டாலும் சர்வாதிகாரமும், மதவெறி அரசியலும் வீழ்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்வது தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். இந்தப் பின்னணியில் நமது எதிர்கால அரசியலை திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்வோம்” என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi