மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி.. !!

டெல்லி : மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் பிரதமர் மோடி உட்பட பாஜவை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சிகள் சார்பில் 11 பேரும் இடம் பெற்றுள்ளனர். முந்தைய பாஜ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 32 பேருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

சபாநாயகர் பதவியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பம் ஆகும். ஆகவே 3 கட்சிகளும் ஒரு பதவிக்கு குறிவைப்பதால் சபாநாயகர் யார் என முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஸ்வரியை சபாநாயகராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் ஆதரவு இன்றி பா.ஜ.க. அரசு தொடர முடியாது என்பதால் சபாநாயகர் பதவியை பெறுவதில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் உறுதியாக உள்ளனர். கட்சிகளில் பிளவு ஏற்பட்டு எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கும்போது முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகரிடமே இருக்கும் என்பதால் அப்பதவிக்கு 2 கட்சிகளும் குறிவைத்துள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பா.ஜ.க. முயற்சித்ததாக ஏற்கனவே நிதிஷ்குமார் கூறியிருந்தார். ஆகவே கட்சியை உடைக்க மீண்டும் அதுபோன்ற முயற்சி நடைபெறாமல் தடுக்க சபாநாயகர் பதவியை நிதிஷ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவில் பிளவு ஏற்பட்டபோது எது உண்மையான கட்சி என்று? சபாநாயகரே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு