மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் பாஜவின் பலம் குறைந்தது: மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்

புதுடெல்லி: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் பாஜவின் பலம் குறைந்துள்ளதால், மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜ பெரும்பான்மை பலத்தை பெறத் தவறி, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், மாநிலங்களவையில் 4 நியமன எம்பிக்களின் பதவிக்காலம் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜவின் 86 ஆக குறைந்துள்ளது. நீண்ட காலத்திற்கு பாஜ 90க்கும் குறைவான மாநிலங்களவை எம்பிக்களுடன் இருப்பது இதுவே முதல் முறை. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101 ஆக குறைந்துள்ளது. இது மசோதாக்களை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட குறைவு.

மாநிலங்களவையில் மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 245. இதில், ஜம்மு காஷ்மீரில் 4 இடங்கள் உட்பட 19 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் 226 எம்பிக்களே உள்ளனர். இதில் மசோதா நிறைவேற்ற 114 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவே பாஜ கூட்டணிக்கு 101 எம்பிக்கள் மட்டுமே இருப்பதால், கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டி உள்ளது. 4 எம்பிக்களை கொண்ட அதிமுக, 11 எம்பிக்களை கொண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு பாஜவுக்கு கட்டாயமாகி உள்ளது. இவ்விரு கட்சிகளும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளதால் இனியும் பாஜவை மறைமுகமாக ஆதரிக்குமா என்பது கேள்விக்குறி. குறிப்பாக, அதிமுக பாஜவுக்கு ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளும் குறைவே.

அதே சமயம், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மாநிலங்களவையில் 87 எம்பிக்களுடன் உள்ளது. இதனால் மாநிலங்களவையிலும் இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இதில் காங்கிரஸ் 26, திரிணாமுல் காங்கிரஸ் 13, திமுக, ஆம் ஆத்மி தலா 10 எம்பிக்களை கொண்டுள்ளன.ஒடிசாவில் ஆட்சியை இழந்த பிஜூ ஜனதா தளம் இனி பாஜவுக்கு ஆதரவு தராது என கூறியிருப்பதால் எதிர்க்கட்சி வரிசையில் இணைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மாநிலங்களவையில் பாஜவுக்கு மசோதாக்களை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் 11 காலி இடங்களுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பாஜவின் எண்ணிக்கை சற்று உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி