நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

டெல்லி: நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் தலைமை கொறடா கொடிக்குள்ளில் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார். நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் முடிந்து எம்.பியாக வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் நேற்றும், இன்றும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழலில் 18வது மக்களவையின் புதிய சபாநாயகர் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு முறையும் பாஜக தனிப் பெரும்பான்மை உடன் இருந்ததால் பிற கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை இல்லை. எனவே தாங்கள் விரும்பிய நபரை தேர்வு செய்து சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்துவிட்டனர். ஆனால் இம்முறை தனிப் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. எனவே சபாநாயகர் பதவிக்கு கூட்டணிக்குள் போட்டி ஏற்பட்டது. ஆனால் தங்கள் வசமே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை வைத்து கொள்ள பாஜக காய் நகர்த்தி வருகிறது. மறுபுறம் 234 உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சிகளும் சபாநாயகர் நாற்காலி தொடர்பாக சில திட்டங்களை தீட்டி வருகிறது. எதிர்க்கட்சிகள் போட்டியிட மாட்டார்கள். எனவே மிகவும் எளிதாக சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக கணக்கு போட்டு வைத்திருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தியா கூட்டணி போட்டிக்கு தயாராகி உள்ளது. தங்கள் தரப்பில் வேட்பாளரை அறிவித்து பாஜகவிற்கு ஆட்டம் காட்டியுள்ளனர். அதன்படி, பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் நாளை (ஜூன் 26) காலை 11 மணிக்கு சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தில் பாஜக கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்களும், காங்கிரஸ் தலைமையகத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் ஆலோசித்து வருகின்றனர். எந்த காரணத்தை முன்னிட்டும் நாளைய தினம் மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு குறைந்துவிடக் கூடாது என்று பாஜக மும்முரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தனது எம்.பிக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொறடா முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளைய தினம் நாள் முழுவதும் அவையிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சுவாரஸியமூட்டும் விஷயம் என்னவென்றால் மேற்சொன்ன உத்தரவை பிறப்பித்த கொறடா தான் கொடிக்குன்னில் சுரேஷ் ஆவார். எனவே நாளைய தினம் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. இதற்கிடையில் சபாநாயகர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசிக்கவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்தது அக்கட்சி அதிருப்தியில் இருப்பதை காட்டியது. ஒருவேளை நாளைய தினம் தேர்தலில் அக்கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்காவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுகிறது. இதனை சமாளித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களையும் வாக்களிக்க வைக்க இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related posts

அரியானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

மனைவிக்கு உடல்நலமில்லை; மருத்துவ செலவுக்கு தேவை ‘ஒரு மாதத்தில் திருப்பி தரேன்…’கடிதம் எழுதிவைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்

அதானியின் பங்குச்சந்தை முறைகேடு கோடக் வங்கியின் பெயரை செபி மறைத்தது ஏன்? ஹிண்டன்பர்க் கேள்வி