லோக்சபா தேர்தல் பிரசார தொடக்கமாக ராகுலின் யாத்திரை 17ம் தேதி மும்பையில் நிறைவு: ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு

மும்பை: ராகுலின் யாத்திரை வரும் 17ம் தேதி மும்பையில் நிறைவு பெறவுள்ள நிலையில், அந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி மேற்குவங்கம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் வழியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் யாத்திரை நிறைவு பெறுகிறது. வரும் 17ம் தேதி மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் ராகுலின் யாத்திரை நிறைவு பெறுவதால், எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து மாநாடு நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ் குமார் வெளியேறிய நிலையில், மும்பையில் எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று கூடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் மம்தா பானர்ஜி, தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததால் அவர் மும்பை நிகழ்வில் பங்கேற்பாரா? என்பது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘ராகுலின் யாத்திரை நிறைவு நிகழ்வை, எதிர்கட்சிகள் ஒற்றுமைக்கான தளமாக மாற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அப்போது நடக்கும் பேரணியில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தலைவர்களையும் அழைத்து வர திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள். இதற்கான முறையான அழைப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மும்பை யாத்திரையை ஒருங்கிணைக்கவும், பொதுமக்கள் பங்களிப்புடன் பேரணியை நடத்தவும் காங்கிரஸ் சார்பில் 2 கமிட்டிகள் அமைக்கப்பட்டன. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் யாத்திரையின் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு தலைமை தாங்குவார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடெட்டிவார் பேரணி ஒருங்கிணைப்பார். இந்த யாத்திரை நாளை நந்தூர்பார் மாவட்டம் வழியாக மகாராஷ்டிராவுக்குள் நுழைந்து துலே, நாசிக், பால்கர் மற்றும் தானே மாவட்டங்கள் வழியாக வரும் 17ம் தேதி மும்பையை வந்தடையும்’ என்றனர்.

Related posts

விழிஞ்ஞம் துறைமுகத்தால் உலக வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது: கேரள முதல்வர் பெருமிதம்

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்றக் கிளை!