உத்தரவாதங்கள் பலிக்குமா

கருத்துத் திணிப்புகளை பொய்யாகி புதிய வரலாற்றை உணர்த்தியுள்ளது மக்களவை தேர்தல். 64 கோடி பேருக்கும் மேற்பட்டோர் வாக்களித்த இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி பிரதமராக 3வது முறையாக பதவியேற்கிறார். கடந்த 1962ம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் தொடர்ச்சியாக 3வது முறையாக ஒரே அரசு பதவியேற்க உள்ளது. முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று பாஜ கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்,
மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறை ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர். இது, அரசமைப்பு சாசனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்துகிறது. ஆந்திராவில் எங்களது கூட்டணியின் மூத்த தலைவர் சந்திரபாபு நாயுடுவும், பீகாரில் எங்களது கூட்டணியின் மூத்த தலைவர் நிதிஷ் குமாரும் அதிக இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம். உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் உத்தரவாதம் இம்முறை பலிக்குமா என்பது தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பாஜ தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் இருந்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்றவற்றை ஏவி விட்டு மிரட்டி பணிய வைத்திருந்தது. தற்போது களம் வேறுமாதிரி மாறியுள்ளது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் ஆதரவில்லாமல் ஆட்சியில் தொடர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இவர்கள் இருவரின் வருகைக்காக இந்தியா கூட்டணியும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது. இதனால் பதவியேற்பு விழாவிற்கு முன்பே சபாநாயகர் பதவி மற்றும் முக்கிய இலாகாக்கள் கேட்டு இரு கட்சிகளும் நெருக்கடி அளிப்பதால் பாஜ தலைமை விழி பிதுங்கி நிற்கிறது.

ஏற்கனவே கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பாஜ ஆட்சியை பறிகொடுத்த சம்பவங்கள் அவர்கள் கண் முன் நிழலாடுவதால் இம்முறை அதேபோன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கட்சி கவனம் செலுத்தும். இதனால் பிரதமரின் உத்தரவாதத்தைப் போல் ‘முக்கிய முடிவுகள்’ எல்லாம் எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அத்தகைய முடிவுகள் எல்லாம் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளத்தின் கண் அசைவு கிடைத்தால் மட்டுமே சாத்தியம். இதையே சாதகமாக்கி நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பு, புதிய வேலைவாய்ப்புகள், மாநில நலன்களை அக்கட்சிகள் தங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. தங்களின் அதிகார வரம்பை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை உடைக்கும் தந்திர காட்சிகளை அரங்கேற்ற குஜராத் குழு முயற்சிக்கும் என்பதால் இந்தியா கூட்டணி அதில் உஷாராக இருக்க முடிவு செய்துள்ளன. எனவே வழக்கமான மோடியின் வாய்ஜாலங்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற வாய்ப்பிருக்காது என்றே தெரிகிறது. மன்மோகன்சிங்கை வசைபாடியவர்களுக்கு கர்மா திரும்பியுள்ளது.

Related posts

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு