மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் 70% பேர் மீது குற்றவழக்கு: பரபரப்பு தகவல்கள்

சேலம்: தமிழகத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களில் 70 சதவீதம் பேர் மீது குற்றவழக்கு உள்ளதாக, தேர்தல் கண்காணிப்பக நிர்வாகி தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், பாஜ வேட்பாளர்களில் 70% பேர் மீது குற்றவழக்கு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்தல் கண்காணிப்பகத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறோம்.

அதன்படி தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 945 பேரின் தகவல்கள், அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்துள்ள விபரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்டுள்ளது. அதன்படி வேட்பாளர்களில் 15 சதவீதம் பேர் (135 வேட்பாளர்கள்) குற்றவழக்கு உடையவர்கள். இதில் 9 சதவீதம் பேர் தீவிர குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள். மொத்த வேட்பாளர்களில் 8 சதவீதம் பேர் மட்டும் பெண்களாக உள்ள நிலையில், 2 சதவீதம் பேருக்கு எழுத, படிக்க தெரியவில்லை. குறிப்பாக, பாஜக வேட்பாளர்களில் 70 சதவீதம் பேர் குற்ற வழக்குகளில் உள்ளனர்.

இவர்களில், 39 சதவீதம் பேர் தீவிர குற்ற வழக்குகளில் உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை 35 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் 34 பேரில் 33 வேட்பாளர்களும், பாஜக சார்பில் போட்டியிடும் 23 பேரில் 22 வேட்பாளர்களும் கோடீஸ்வரராக உள்ளனர். அதிகபட்சமாக ஈரோட்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு ₹662 கோடியும், சிவகங்கையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ்விற்கு ₹304 கோடியும், வேலூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ₹152 கோடியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு