மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்ற உத்தரவு: தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: மக்களவை தேர்தல் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. அதன் முதல்படியாக சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பணிகளை தேர்தல் கமிஷன் முறைப்படி தொடங்கி உள்ளது. அதன் முதற்கட்டமாக சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய மக்களவை தேர்தலுடன், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. அரசியல் சார்பு கொண்ட அதிகாரிகள், தேர்தல் செயல்பாட்டில் தலையிடாமல் இருக்கவும், சமநிலைக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிச.21ம் தேதியிட்ட கடிதத்தில்,’ தேர்தலுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்த அதிகாரியும், தனது சொந்த மாவட்டத்தில் தற்போதைய பதவியில் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு மாவட்டத்தில் மூன்றாண்டுகளை முடித்திருந்தாலோ அல்லது அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யவிருந்தாலோ அந்த அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் எந்தவொரு நீதிமன்றத்திலும் உத்தியோகபூர்வ செயல்பாடு தொடர்பான கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள எந்த அதிகாரியும் தேர்தல் தொடர்பான பணி வழங்கக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்