மக்களவை வரும் 24ம் தேதி கூடுகிறது.. ஜூன் 26-ல் சபாநாயகர் தேர்தல்.. ஜூன் 27ல் ஜனாதிபதி உரை : ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!!

புதுடெல்லி: வரும் 24-ம் தேதி 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ), அறுதி பெருபான்மையை எட்டவில்லை. இதையடுத்து கூட்டணி கட்சிகளின் தயவுடன் கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ அரசு பதவியேற்றது.இந்த சூழலில் வரும் 24-ம் தேதி 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்.

அதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்பார்கள். உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பாஜக மூத்த தலைவர் ராதா மோகன் சிங் மக்களவையின் தற்காலிக தலைவராக இருந்து புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிகிறது. இதையடுத்து ஜூன் 26-ல் மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும், 27-ல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். ஜூலை 3-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாநிலங்களவை கூட்டத்தொடர் ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.புதிய அரசு பதவியேற்றுள்ள சூழலில் நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை 22ல் தாக்கலாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், ஜூலை 22 முதல் ஆக.9 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்