பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட்தேர்வு.. இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து விட்டார் மோடி: நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த ராகுல்!!

டெல்லி : மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “அக்னிபாத் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால் அதை வீரமரணமாக ஒன்றிய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது. அக்னிவீர் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால் அதை வீரமரணமாக பாஜக அரசு ஏற்காது. அக்னிபாத் திட்டம் என்பது ராணுவ வீரர்களுக்கானது அல்ல; பிரதமர் மோடியின் மூளையில் உதித்த திட்டம். அக்னிபாத் திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல; பிரதமர் மோடி தான். அக்னிபாத் திட்டமே யூஸ் அன் த்ரோ போல உள்ளது,”எனத் தெரிவித்தார். ராகுலின் பேச்சுக்கு நடுவே குறுக்கிட்ட ராஜ்நாத் சிங், “அவையில் தவறான தகவல்களை காங்கிரஸ் சொல்கிறது,”என குறிப்பிட்டார். மேலும் அக்னி வீரர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித்ஷா எதிர்ப்பு தெறிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,”,மணிப்பூரில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆனாலும் பிரதமர் மணிப்பூர் செல்ல மாட்டார். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பிரதமர் ஏன் அங்கு செல்லவில்லை? ஒன்றிய அரசின் கொள்கைகளால் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நீடித்து வருகிறது. பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. கடவுளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாக கூறியவர் மோடிதான்; நான் கூறவில்லை. மும்பை விமான நிலையத்தை அதானிக்கு கொடு என கடவுள் கூறியதால் மோடி செய்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து விட்டார் மோடி. பணமதிப்பிழப்பால் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்தனர். சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும்.

வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது நீட்தேர்வு. நீட்தேர்வில் 22 சதவீதம் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நீட் தேர்வு மூலம் பயிற்சி மையங்கள் ஆயிரக்கணக்கான கோடி சம்பாதிக்கின்றன. பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் குறித்து விவாதிக்கக் கோரினால் அரசு அதை பரிசீலிக்கவில்லை. நீட் முறைகேடு பற்றி குடியரசுத் தலைவரின் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. விவசாயிகள் விரும்பாத வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தினர். போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என பாஜக அரசு கூறியது. அதானி, அம்பானியின் ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?. நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சட்டப்பூர்வ உறுதியுடன் குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு தரவில்லை. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கியதுதான் மத்திய அரசின் சாதனை ஆகும். நாட்டில் மருத்துவக்கல்வியை வியாபாரமாக்கி விட்டனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு