மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றதால் தேசிய அரசியலில் இறங்கும் அகிலேஷ் யாதவ்

புதுடெல்லி: மக்களவை உறுப்பினராக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றதால், அவர் தேசிய அரசியலில் களம் இறங்குகிறார். இவர் வகித்த உத்தரபிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால்சிங் யாதவ் அமர்கிறார். மக்களவை தேர்தலில் நாட்டின் 3வது பெரிய கட்சியாக சமாஜ்வாதி உருவெடுத்துள்ளது. இக்கட்சிக்கு உ.பி.யில் 37 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதன் வாக்கு சதவீதமும் உயர்ந்து 33.59 என்றாகியுள்ளது.

இந்தியா கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களான சமாஜ்வாதியும், காங்கிரசும் தனிப்பட்ட முறையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதற்கு எதிர்பாராத வெற்றியாக காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்துள்ளன. பாஜ ஆளும் உ.பி.யின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரகா அகிலேஷ் யாதவ் இருந்து வருகிறார். உ.பி.யின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்எல்ஏவாகவும் அகிலேஷ் உள்ளார். திடீரென தன் முடிவை மாற்றிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலிலும் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியின் எம்பியாகி விட்ட அகிலேஷ் யாதவ் இனி, தேசிய அரசியலில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளார். இதனால், அவர், தனது எம்எல்ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை, தன் சித்தப்பாவான ஷிவ்பால்சிங் யாதவுக்கு வழங்க அகிலேஷ் திட்டமிட்டுள்ளார். சமாஜ்வாதியில் தலைவராக அகிலேஷ் யாதவ் அமர்த்தப்பட்டது முதல் அதிருப்தியாக இருந்தார் சிவ்பால்சிங். இதனையடுத்து, சமாஜ்வாதியிலிருந்து வெளியேறி தனிக்கட்சியும் துவங்கினார். ஒருகட்டத்தில் பாஜவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். பிறகு உ.பி.யின் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஷிவ்பாலை சமாதானப்படுத்தி கட்சியில் சேர்த்தார் அகிலேஷ்.

இச்சூழலில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஷிவ்பால் ஏற்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்போது, தம் கட்சியின் மூத்த எம்எல்ஏக்களில் ஓபிசி, தலித் அல்லது முஸ்லிம்களில் ஒருவருக்கு அப்பதவியை அகிலேஷ் அளிப்பார் என தெரிகிறது. சமாஜ்வாதியின் நிறுவனரான அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ் உயிருடன் இருந்தவரை அவர் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வந்தார்.

ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் முலாயம் பதவி வகித்திருந்தார். அவருக்கு பின் சமாஜ்வாதிக்காக தேசிய அரசியலில் அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். ஏற்கனவே, அகிலேஷ் யாதவின் மற்றொரு ஒன்றுவிட்ட சித்தப்பாவான ராம் கோபால் யாதவ் 6வது முறையாக மாநிலங்களவை எம்பியாக உள்ளார். அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவும் மெயின்புரியின் எம்பியாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இதனால், கணவன்-மனைவி எம்பிக்களாக ஒரே ஜோடியாக நாடாளுமன்றத்தில் அகிலேஷும், டிம்பிளும் இருப்பார்கள். இதற்குமுன், இவர்களை போல் கணவன் மனைவியாக டாக்டர் சுப்பராயன் -தாதாபாய் தம்பதிகள் நேருவின் ஆட்சியில் எம்பி தம்பதிகளாக இருந்தனர். ஆனால், இருவரும் ஒரே அவையில் அன்றி, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வகித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது