மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தேர்தல் ஆணைய குழு இன்று ஆந்திரா பயணம்

புதுடெல்லி: ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றியத்தில் தற்போதுள்ள மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு களமிறங்கி உள்ளது. முந்தைய அறிவிப்பின்படி ஜன.7(நேற்று) முதல் 10ம் தேதி வரை தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மக்களவை, பேரவை தேர்தல்களை சந்திக்கவுள்ள ஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட ஆய்வு பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்று தொடங்குகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் இன்று மாலை ஆந்திரா செல்லவுள்ளனர். அங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வருமான வரித்துறை, கலால்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related posts

தென்காசி வெண்ணமடை குளத்தில் படகு சேவை தொடக்கம்..!!

திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு