மக்களவை விவாதத்தில் பேசி முடித்ததும் ‘பறக்கும் முத்தம்’கொடுத்ததாக ராகுல் மீது ஸ்மிருதி இரானி புகார்: சபாநாயகரிடம் பாஜ பெண் எம்பிக்கள் மனு

புதுடெல்லி: மக்களவை விவாதத்தில் பேசி முடித்ததும், ராகுல் காந்தி தன்னைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று பேசி முடித்ததும், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்து பேசினார். அப்போது, ராகுல் காந்தி பேசி முடித்த பிறகு பறக்கும் முத்தம் கொடுத்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஸ்மிருதி இரானி பேசுகையில், ‘‘பெண் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுக்க, பெண் விரோத எண்ணம் கொண்ட நபரால் மட்டுமே முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை இதற்கு முன் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் பார்த்ததில்லை’’ என கடுமையாக பேசினார். அதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட பாஜ பெண் எம்பிக்கள் கூட்டாக சபாநாயகரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

இது குறித்து ஒன்றிய அமைச்சரும் பாஜ தலைவருமான ஷோபா கரந்த்லாஜே கூறுகையில், ‘‘நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. என்ன நடத்தை இது? அவர் எப்படிப்பட்ட தலைவர்? சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம். சிசிடிவி காட்சிகளை எடுத்து ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார். இது குறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைவர்கள், ‘‘ராகுல் காந்தி பேசி முடித்ததும், சகோதர சகோதரிகளே என்று கூறியபடியேதான் பறக்கும் முத்தத்துடன் வெளியேறினார். யாரையும் குறிப்பிட்டு அவர் சைகை காட்டவில்லை. குறிப்பாக அமைச்சரை பார்த்து செய்யவில்லை. இதெல்லாம், ராகுலின் பேச்சை திசை திருப்ப பாஜவினர் செய்யும் சூழ்ச்சி. ராகுல் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ததில்லை. அவர் மீது தவறான நடத்தை குற்றம்சாட்டி பாஜ அநாகரீகமான அரசியலில் ஈடுபடுகிறது’’ என்றனர்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘‘ஸ்மிருதி இரானியை ‘ராகுல் போபியா’ வாட்டி வதைக்கிறது. அவர் அதிலிருந்து வெளியே வர முயற்சிக்க வேண்டும்’’ என்றார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘அவையில் இருந்த அனைவரும் ராகுலை கவனித்தனர். அவர், மனித நேயத்தின் அடையாளமாகவும், அன்பு மற்றும் பாசத்தின் அடையாளமாகவும் செய்ததை, மனதிற்குள் எதையாவது நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அது அவர்களின் தவறு, ராகுலின் தவறல்ல. நீங்கள் வெறுப்பை பரப்புகிறீர்கள், நாங்கள் அன்பை விதைக்கிறோம். இது மிகவும் தெளிவாகிறது’’ என்றார். சிவசேனா எம்பி (உத்தவ் தாக்கரே அணி) பிரியங்கா சதுர்வேதி கூறுயைில், ‘‘நான் பார்வையாளர்கள் கேலரியில் இருந்தேன். ராகுல் அன்பின் சைகையாகத்தான் அதை செய்தார். அவர்களால் அன்பை ஏற்க முடியாது’’ என்றார்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்