லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடு 7, 8, 9ம் தேதியில் தமிழ்நாடு ஆந்திராவில் ஆய்வு?: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: தமிழ்நாடு, ஆந்திராவில் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை வரும் 7, 8, 9ம் தேதியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் தரப்பில் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு போன்ற விசயங்கள் பேசப்பட்டு வருகிறது. அதேநேரம் தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான தேர்தல் வேலைகளையும் தலைமை தேர்தல் கமிஷன் முடுக்கிவிட்டுள்ளது.

அடுத்த வாரம் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் குழுவானது, மாநிலம் வாரியான தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது. அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஆணையர்கள் ஏ.நூப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் நாளை (ஞாயிறு) முதல் வரும் செவ்வாய் கிழமை வரை ஆந்திரா, தமிழ்நாட்டில் தேர்தல் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் நிர்வாக மட்டத்தில் மாநில தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். 17வது லோக்சபாவின் கடைசி கூட்டம் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் முடிவுற்ற பின்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 23 அன்று வெளியிடப்பட்டன. எனவே லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியிடுவதற்கான கால அவகாசம் இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்தல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!