வரும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தனித்து போட்டி: மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: வரும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதே போல, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கொல்கத்தாவில் அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தொகுதி பங்கீடு தொடர்பாக நாங்கள் காங்கிரசுக்கு ஒரு முன்மொழிவை கொடுத்தோம். ஆனால் அதை அவர்கள் மறுத்து விட்டனர். எனவே இப்போது நாங்கள் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். மேற்கு வங்கத்தை பொறுத்த வரை காங்கிரசுடன் இனி எந்த உறவும் இருக்காது. வரும் மக்களவை தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் தனித்து போட்டியிடட்டும். ஒற்றுமையாக உள்ள பிராந்திய கட்சிகள் மீதமுள்ளவற்றில் போட்டியிடலாம். இங்கு நாங்கள் அனைத்து தொகுதியிலும் தனித்து களமிறங்குவோம். இந்தியா கூட்டணியை பொறுத்த வரையில் மக்களவை தேர்தலுக்குப் பிறகு எங்கள் வியூகத்தை நாங்கள் தீர்மானிப்போம். பாஜவை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு 2 தொகுதிகளை தருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியது. இதை காங்கிரஸ் மேலிடம் ஏற்க மறுத்ததால் இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை முடங்கியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி 10 முதல் 12 இடங்கள் வரை கேட்பதாகவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கிடையே, தனித்து போட்டியிடுவதாக மம்தாவின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், பாஜ 18 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ராகுல் யாத்திரை பற்றி தகவல் தெரிவிக்கவில்லை: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று மேற்கு வங்கத்தில் நுழையும் நிலையில் மம்தாவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராகுல் யாத்திரை குறித்த கேள்விக்கு பதிலளித்த மம்தா, ‘‘யாத்திரை குறித்து எந்த தகவலையும் எனக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை’’ என்றார். இதனால் ராகுல் யாத்திரையில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டி
மம்தா அறிவிப்பைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் தங்கள் கட்சி கூட்டணி சேராது என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் நேற்று அறிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘நாட்டில் பஞ்சாப் ஹீரோவாக மாறும். வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 13 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி சேர மாட்டோம். தனித்து போட்டியிடுவோம்’’ என கூறினார். டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவா மற்றும் குஜராத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா இல்லாமல் இந்தியா கூட்டணியா?
அசாமில் உள்ள வடக்கு சல்மாராவில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் முக்கிய தூண். மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. எனவே மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் போட்டியிடும். நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம். மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிப்பது நம் அனைவரின் தலையாய கடமை என மம்தா கூறியிருக்கிறார்’’ என்றார்.

விபத்தில் சிக்கிய மம்தா
மம்தா பானர்ஜி நேற்று நிர்வாக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க பர்பா பர்தமானுக்கு சென்று விட்டு கொல்கத்தாவுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு வாகனம் மீது மோதாமல் இருக்க அவரது கார் திடீரென பிரேக் பிடிக்கப்பட்டது. இதில் டிரைவர் சீட்டுக்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த மம்தா நிலைதடுமாறி காரில் மோதி நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவுக்கு வந்த மம்தாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

பாஜவுக்கு குஷி
மேற்கு வங்க பாஜ இணை பொறுப்பாளரும், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப துறை தலைவருமான அமித் மால்வியா தனது டிவிட்டர் பதிவில், ‘‘ மம்தாவின் முடிவு விரக்தியின் அடையாளம். இந்தியா கூட்டணியின் முகமாக தன்னை முன்னிலைப்படுத்துவார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாததால் விரக்தியில் விலகி உள்ளார். ராகுலின் யாத்திரை மேற்கு வங்கத்திற்கு வரும் முன்பாக மம்தா தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு அடிக்கப்பட்ட சாவுமணி’’ என கூறி உள்ளார். இதே போல பாஜ தலைவர்கள் மம்தா முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலி 68 ஆக உயர்வு

காரில் கடத்திய ரூ.60 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 8 செல்போன்கள், ஆயுதங்களுடன் 3 பேர் கைது

இடைப்பாடியில் அதிகாலை பரபரப்பு போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு: பெரிய ரவுடி ஆவதற்காக வீசியதாக கைதான லாரி கிளீனர் வாக்குமூலம்