உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.52.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒருநாள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், கலெக்டர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களின் முன்னிலையில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில், மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் மனுக்கள் பெறப்படுகின்றது. இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், பெறப்பட்ட சுமார் 150 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள், மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரிசெய்ய வேண்டும், மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது, அதனை சரிசெய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

நமக்கு தெரியாத சில பிரச்னைகள் மற்றும் மக்களின் தேவைகளை நேற்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டார். பின்னர், கூட்டுறவுத்துறை சார்பில் 3 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.47,16 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.3,70,118 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடனுதவிகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.1,62 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகள் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு, ரூ.52.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-2023ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 10ம் வகுப்பில் மாவட்டத்தில் சிறப்பு நிலை பெற்ற 15 மாணவர்களுக்கு தலா ரூ.10,000மும், 12ம் வகுப்பில் சிறப்பு நிலை பெற்ற 15 மாணவர்களுக்கு தலா ரூ.20,000மும், சிறந்த செயல்பாட்டிற்காக ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சமும், ஏனாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும் பரிசுக்தொகையாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு