கால்நடை பராமரிப்பு எங்களுடையது… லாபம் உங்களுடையது!

நன்றி குங்குமம் தோழி

‘‘பாலை போல லாபம் தரக்கூடிய ஒரு பொருள் வேறு எதுவும் கிடையாது. அந்த அளவிற்கு அதன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது’’ என பேசத் துவங்கினார், திருமுல்லைவாயில் உக்ரா ஃபார்ம்ஸின் நிறுவனர் யமுனா தினேஷ். ‘‘படிச்சது எம்.காம். இல்லத்தரசியாக இருந்த என்னை, என் விருப்பத்தின் பேரில் பிடித்ததைச் செய்யச் சொல்லி என் கணவர்தான் ஊக்குவித்தார். அவரின் யோசனையால் துவங்கியதுதான் எங்களின் உக்ரா ஃபார்ம்ஸ். கிட்டதட்ட 15 வருடங்களாக வெற்றிகரமாக நடத்திட்டு இருக்கோம்.

‘‘ஆரம்பத்தில் கணவரின் ஆசைக்காகவும், பொழுது போக்கிற்காகவும் சிறிய அளவில்தான் இதனை துவங்கினோம். நாளடைவில் எங்க இருவருக்குமே இதன் மேல் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சது. பொழுது போக்கிற்காக துவங்கினாலும், தற்பொழுது அதுவே எங்களின் முழுநேர வேலையாக மாறியுள்ளது. இதன் முழு யோசனை என் கணவருடையதுதான். அதை நான் பெருமையாக சொல்லுவேன். அவர் படிப்பை முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆரம்பத்தில் நான்கு மாடுகளை கொண்டுதான் இதனை ஆரம்பித்தோம். அவர் வேலைக்கு செல்வதாலும் நான் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், ஆட்களை வைத்து தான் எங்க பண்ணையை பராமரித்து வந்தோம். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு நாங்க இருக்கும் இடத்தின் அருகே மாற்றியமைத்து நாங்களே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தோம். அதன் பிறகு எருமைகள் மற்றும் கோழிகளும் பராமரிக்க துவங்கினோம். நான்கு மாடுகளில் ஆரம்பித்து தற்போது 200க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரித்து வருகிறோம்.

மாடுகள், கோழிகள் மட்டுமில்லாமல், குதிரை, கழுதை, வாத்து என அனைத்தும் எங்க பண்ணையில் வளர்த்து வருகிறோம். என் குழந்தைகளுக்கும் இப்போது இருந்தே பண்ணைக் குறித்து சொல்லிக் கொடுத்து தான் வளர்க்கிறோம். அவங்களுக்கு இவங்க கூட நேரம் செலவு செய்வது தான் பொழுதுபோக்கே’’ என்ற யமுனா, தங்களது பண்ணையில் கால்நடைகளின் பராமரிப்பு முறை குறித்து விளக்குகிறார்.

‘‘நாம் எந்த வேலை செய்கிறோமோ அந்த துறை குறித்து முழுமையா தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் இது பற்றி தெரியாது என்றாலும், நாங்க பண்ணை ஆரம்பிக்க திட்டமிட்டதும், கால்நடையை பராமரிப்பது, பால் கொள்முதல் மற்றும் சாணங்கள் கொண்டு மதிப்புக்கூட்டல் பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என அனைத்தும் தெரிந்து கொண்டோம். எல்லாம் தெரிந்திருந்தும், எங்களால் அதனை ஆரம்பத்தில் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.

பல தோல்விகளை சந்தித்தோம். அதுவே பல விஷயங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட தோல்விதான் அதில் நாங்க என்ன தவறு செய்தோம், அதை எவ்வாறு மாற்றி அமைத்து முன்னேறணும்னு கற்றுக் கொண்டோம். தோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதற்கு நாங்களே உதாரணம்.

எங்களின் பண்ணையில் இருக்கும் மாடுகள், எருமைகள், குதிரைகளுக்கு தனிப்பட்ட உணவுகள் மற்றும் மருத்துவ பராமரிப்பு என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறோம். கோழிகளை பராமரிக்க தனியாக இன்குபேட்டர் அறையும் உள்ளது. இவற்றை கவனிக்க வேலையாட்களும், கால்நடை மருத்துவர்களும் இருக்காங்க. மேலும் பண்ணை குறித்து தினந்தோறும் நாங்க அப்டேட்டாக வைத்துக் கொள்வோம்.

அதாவது, என்னென்ன மாடுகள் விற்பனைக்கு உள்ளது, புதுசா என்ன மாடுகள் மற்றும் கோழிகள் பண்ணைக்குள் வர உள்ளது. எவ்வளவு பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தீவனம், மற்ற உணவுப் பொருட்கள், மதிப்புக்கூட்டல் பொருட்களின் எண்ணிக்கை என அனைத்தும் குறித்து நாங்க அன்றாடம் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுவோம். ஒரு அலுவலகம் எப்படி செயல்படுமோ அதே போல குழு ஒன்று அமைத்து பராமரித்து வருகிறோம்.

எங்க பண்ணை பத்து ஏக்கர் பரப்பளவில் இருப்பதால், அனைத்து கால்நடைகளையும் இங்கே மேய்ச்சலுக்காக விட்டுவிடுவோம். பால் கொள்முதல், மாடு, கோழிகள் விற்பனை தவிர, பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீள் அமிலம், விபூதி, சம்பிராணி, மண்புழு உரம், மாட்டு எரு அனைத்தும் விற்பனை செய்கிறோம். கடந்த சில வருடங்களாக எங்க பண்ணைக்கு கால்நடை மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப்பிற்காக வருகிறார்கள்.

இங்கு ஏற்கனவே கால்நடை மருத்துவர்கள் இருப்பதால், மாணவர்களுக்கு ஒவ்வொன்றையும் செயல்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுக்கிறார்கள். கடந்த மூன்று வருடத்தில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். அவர்கள் இங்கு பயிற்சி பெற்றதற்காக சான்றிதழும் வழங்கி வருகிறோம். விவசாயிகள் மற்றும் எங்களைப் போல் பண்ணை வைக்க விரும்புபவர்களுக்கும் கால்நடை பராமரிப்பு குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் மதிப்புக்கூட்டல் பொருட்கள் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது. வருங்கால தலைமுறையினருக்கு இதன் மேல் ஒரு ஆர்வத்தினை உருவாக்கும் வகையில் மக்கள் எங்க பண்ணையை பார்வையிடவும் அனுமதிக்கிறோம்’’ என்றவர், தங்களுடைய பண்ணையின் குறிப்பிட்ட ஒரு சிறப்பம்சம் பற்றி பேசினார்.

‘‘பலருக்கு மாடு, கோழி வளர்க்க விருப்பம் இருக்கும். ஆனால் அவர்கள் வசிக்கும் இடத்தில் அதற்கான வசதி இருக்காது. அவர்கள் நம்மிடம் உள்ள மாடுகளையோ அல்லது அவர்கள் வாங்கி வரும் மாடுகளையோ நம்முடைய பண்ணையில் வைத்து பராமரித்து வளர்க்கலாம். மாடு வாங்கும் செலவு மட்டும்தான் அவர்களுடையது. அந்த மாட்டுக்கான பராமரிப்பு அதாவது, மாட்டுத்தீவனம், மருத்துவம், இதர செலவுகள் அனைத்தையும் மாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நாங்க அந்த மாட்டின் பராமரிப்புக்காக எடுத்துக் கொள்வோம். அந்த மாட்டினை பராமரிக்கும் நபருக்கும் அதற்கான சம்பளமும் கொடுத்திடுவோம்.

மீதம் இருக்கும் பணம் மாட்டின் உரிமையாளருக்கு. நாங்க அவர்களின் மாட்டினை சரிவர பராமரிக்கிறோமா என்பதை பண்ணையில் இருக்கும் சிசிடிவி கேமரா ஆக்செஸ் மூலமாக அவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வார விடுமுறை அல்லது நேரம் கிடைக்கும் போது குடும்பத்துடன் நேரில் வந்து மாடுகளுடன் நேரம் செலவிட்டு செல்லலாம். இதன் மூலம் மாடுகள் வளர்க்க வேண்டும் என்ற அவர்களின் ஆசையும் நிறைவேறும்,
ஒரு குறிப்பிட்ட கணிசமான பணத்தையும் சம்பாதிக்க முடியும்’’ என்று புன்னகைத்தார் யமுனா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

Related posts

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!

உன்னத உறவுகள்