15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை சாதனை

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுப்பழக்கம், உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணத்தினால் கல்லீரல் அழற்சி நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த அழற்சி நோயை தடுக்கும் வண்ணம் தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனியாக சிகிச்சை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த 2021 முதல் தான் இதற்கென தனி சிகிச்சை கட்டிடம் அமைக்கப்பட்டு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 150 முதல் 200 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்நிலையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகள் மற்றும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது.

அதனடிப்படையில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.7 கோடியில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இதுவரை 4 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

அதனை தொடர்ந்து கடந்த 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 8 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும், இந்த ஆண்டு இதுவரை 3 அறுவை சிகிச்சைகளும் என 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் ரூ.35 லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமின்றி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு